12 ஆயிரம் ஊழியர்களை பணிநீக்கம் செய்ய பேஸ்புக் முடிவு
மெட்டா நிறுவனம் பேஸ்புக் நிறுவனத்தில் பணியாற்றும் 12 ஆயிரம் ஊழியர்களை வேலையிலிருந்து நீக்க திட்டமிட்டுள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. இதில் மேலும் அதிர்ச்சியாக, இந்த நடவடிக்கையை "குய்ட் லேஆப்" (quiet Layoff) அதாவது சத்தமில்லாமல் அமைதியான முறையில் பேஸ்புக் நிறுவனம் மேற்கொள்ளவுள்ளதாக கூறப்படுகிறது. ஏற்கனவே இந்த நிதியாண்டில் புதிதாக வேலைக்கு ஊழியர்களை எடுப்பதை நிறுத்தி வைத்துள்ள மெட்டா நிறுவனம், தற்போது ஆட்குறைப்பு நடவடிக்கையில் ஈடுபடவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
மெட்டா நிறுவனத்தின் விளம்பர வருவாய் நாளுக்கு நாள் சரிந்து வரும் நிலையில் செலவுகளைக் குறைக்க வேண்டும் என்பதற்காக முதல்கட்டமாக செயல்திறன் குறைவாக இருக்கும் ஊழியர்களை கண்டறிந்து அவர்களை பணி நீக்கம் செய்ய மார்க் ஜூக்கர்பெர்க் உத்தரவிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. நிறுவனத்தில் ஆட்குறைப்பு பொறுப்பு பல மூத்த அதிகாரிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது என்றும் அவர்கள் அமைதியாக இந்த பணியில் ஈடுபட்டுள்ளனர் எனவும் கூறப்படுகிறது. ஊழியர்களின் செயல்திறன்களை மதிப்பிட்டு, சிறப்பாக பணியாற்றாத ஊழியர்களை அடையாளம் கண்டு, பணி நீக்கம் செய்ய நடவடிக்கையை மேற்கொண்டு வருகின்றனர்.
சந்தை போட்டி, வருவாயில் வீழ்ச்சி, நிர்வாக சீரமைப்பு ஆகிய காரணிகளை அடிப்படையாக கொண்டு இந்த ஆட்குறைப்பு நடவடிக்கையானது நடைபெறவுள்ளது. இதன் அடிப்படையிலேயே அடுத்த சில வாரங்களில் சுமார் 12,000 ஊழியர்களை பேஸ்புக் வெளியேற்றவுள்ளதாகக் கூறப்படுகிறது. இதனால் அந்நிறுவன ஊழியர்கள் தற்போது மிகுந்த அச்சத்தில் உள்ளனர்.