இந்தியாவிலிருந்து மீளக் குடியமர்ந்தோர் தொடர்பான பிரச்சினைகள் மற்றும் தகவல் திரட்டல்களின் விசேட கலந்துரையாடல் Zoom செயலி ஊடாக இடம்பெற்றது
முல்லைத்தீவு மாவட்டத்தில் இந்தியாவிலிருந்து மீளக் குடியமர்ந்தோர் தொடர்பான பிரச்சினைகள் மற்றும் தகவல் திரட்டல்களின் விசேட கலந்துரையாடல் இன்று(03-10-2022) பி.ட 3.00மணிக்கு மாவட்ட அரசாங்க அதிபர் க.விமலநாதன் தலைமையில் Zoom செயலி ஊடாக இடம்பெற்றது.
நீதி சிறைச்சாலை அலுவல்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சு இந்தியாவிலிருந்து மீளக் குடியமர்ந்தோர் தொடர்பான பிரச்சினைகளை தீர்ப்பதற்கான விடயங்களில் அதிக கவனம் செலுத்தி மாவட்ட அரசாங்க அதிபர்களுடன் கலந்துரையாடல்களை நடாத்தி வருகிறது.
இந் நிலையில மீளக் குடியமர்ந்தோர் தொடர்பான சட்டபூர்வமான பிரச்சினைகளை அடையாளப்படுத்துவதற்காக, மாவட்ட மட்டத்தில் தீர்க்க முடியாத பிரச்சினைகளை கொழும்பு மட்டத்திற்கு எடுத்துச் செல்வதற்காகவே குறித்த கலந்துரையாடல் இன்று இடம் பெற்றது.
இதன்போது இந்தியாவிலிருந்து மீளக் குடியமர்ந்தோர் தொடர்பாக திரட்டப்பட்ட தரவுகளின் அடிப்படையில் பிறப்புச் சான்றிதழ்கள், இறப்புச் சான்றிதழ், குடியுரிமை, தேசிய அடையாள அட்டை, பாடசாலைகளில் இணைத்தல், காணி, சட்ட ரீதியான பிரச்சினைகள், பட்டம், வாழ்வாதாரம் உள்ளிட்ட பிரச்சினைகள் ஆராயப்பட்டது.
முல்லைத்தீவு மாவட்டத்தில் 2009ம் ஆண்டு தொடக்கம் 2022ம் ஆண்டு வரை 405 குடும்பங்களைச் சேர்ந்த 878 பேர் மீளக் குடியமர்ந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.இக் கலந்துரையாடலிஸ் மாவட்ட செயலக திட்டமிடல் பணிப்பாளர் ம.கி வில்வராஜா, பிரதேச செயலாளர்கள், மாவட்ட செயலக மற்றும் பிரதேச செயலகங்களின் உதவித் திட்டமிடல் பணிப்பாளர்கள், விடயதான உத்தியோகத்தர் உள்ளிட்டோர் கலந்து கொண்டிருந்தனர்.