முல்லைத்தீவு மாவட்டத்தில் பாதிக்கப்பட்ட மக்களது உயிர்களைக் காப்பாற்றவும், அதிகரித்துவரும் உணவுப்பாதுகாப்பின்மையைத் தணிக்கவும் உலக உணவுத்திட்டத்தின் தலைமைப் பீட உயரதிகாரிகள், அதிககவனம் செலுத்தி வருகின்றனர் .
உலக உணவு திட்டம் இலங்கையில் மிகவும் பாதிக்கப்பட்ட மக்களது உயிர்களைக் காப்பாற்றவும், அதிகரித்துவரும் உணவுப்பாதுகாப்பின்மையைத் தணிக்கவும் அவசர வேலைத்திட்டங்களில் அதிககவனம் செலுத்தி வருகிறது.
அதன் அடிப்படையில் ஆகஸ்ட் மாதத்திலிருந்து முல்லைத்தீவு, காலி, நுவரெலியா ஆகிய மாவட்டங்களில் இனங்காணப்பட்ட உணவுப்பாதுகாப்பற்ற மக்களுக்கு பண உதவியினை வழங்கல் மற்றும் உணவுப் பொதி வழங்கல் திட்டத்தினை முதல் முதலாக நடைமுறைப்படுத்த உத்தேசித்துள்ளது.
முல்லைத்தீவு மாவட்டத்தில் 30, 292 பயனாளிகளை உள்வாங்கி கடந்த ஆகஸ்ட் மாதம் 07ம் திகதி மாவட்டத்தில் உணவுப்பாதுகாப்பற்ற மக்களுக்கு பண உதவியினை வழங்கல் உதவித் திட்டத்தினை ஆரம்பித்து வைத்ததைத் தொடர்ந்து நடைமுறைப்படுத்தி வருகிறது.
தொடர்ந்து உணவுப் பொதி வழங்கல் திட்டத்தினை முல்லைத்தீவு மாவட்டத்தின் கரைதுறைப்பற்று, புதுக்குடியிருப்பு, ஒட்டுசுட்டான் ஆகிய பிரதேச செயலர் பிரிவுகளில் நடைமுறைப்படுத்த ஆரம்பித்துள்ளது.
குறித்த திட்டத்திற்கான பயனாளி தெரிவு முறைமை தொடர்பான பயிற்சிப்பட்டறை உலக உணவுத் திட்டத்தின் மாவட்ட பொறுப்பதிகாரி ஜெயபவாணி தலைமையில் மாவட்ட செயலக அரியாத்தை மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது.
இதன்போது உலக உணவுத்திட்டத்தின் பயனாளி தெரிவு முறைமை தொடர்பாக கலந்துகொண்டோரிற்கு விளக்கமளிக்கப்பட்டது.குறித்த நிகழ்வில் உலக உணவுத்திட்டத்தின் தலைமைப் பீட உயரதிகாரிகள், மாவட்ட செயலக திட்டமிடல் பணிப்பாளர் ம.கி .வில்வராஜா, குறித்த பிரதேச செயலாளர்கள், உதவித் திட்டமிடல் பணிப்பாளர்கள், உதவிப் பிரதேச செயலாளர்கள், மாவட்ட உலக உணவுத்திட்ட நிகழ்ச்சி திட்ட உத்தியோகத்தர் வ.கஜானனன், குறித்த திட்டத்தின் ஒருங்கிணைப்பு பங்காளி நிறுவனமான சர்வோதயம் நிறுவனத்தின் உத்தியோகத்தர்கள், பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் என பல்வேறு தரப்பினரும் கலந்து கொண்டிருந்தனர்.