கல்மடுக் குளத்தின் நீரை சட்டவிரோதமாக பயன்படுத்தி பயிர்செய்கை உரிய நடவடிக்கைகளை முன்னெடுக்க பயிர்செய்கை குழுக் கூட்டத்தில் தீர்மானம்கொண்டு வரப்பட்டுள்ளது
கிளிநொச்சி புளியம் பொக்கணை பகுதியில் கல்மடுக் குளத்தின் நீரை சட்டவிரோதமாக பயன்படுத்தி பயிர்செய்கை மேற்கொண்டுள்ளமை தொடர்பில் உரிய நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும் என மாவட்ட பயிர்செய்கை குழுக் கூட்டத்தில் தீர்மானம்கொண்டு வரப்பட்டுள்ளது.
கிளிநொச்சி புளியம்பொக்கணை பகுதியில் மாவட்ட பயிர் செய்கை குழுவின் தீரமானங்களுக்கு மாறாக கல்மடுக்குளத்து நீரை பயன்படுத்தி தற்போது சுமார் 50 ஏக்கருக்கு மேற்பட்டநிலப்பரப்பில் பிரதேசத்திலுள்ள ஆசிரியர் மற்றும் கமக்கார அமைப்பின் தலைவர் மற்றும் பணவசதி படைத்தவர்களால் இவ்வாறு நெற்செய்கை சட்ட விரோதமாக மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன் நீர்ப்பாசன திணைக்களத்தின் முழுமையான கட்டுப்பாட்டில் உள்ள கல்மடுக் குளத்திலிருந்தும் இதற்காக மூன்று தடவைகள் நீர் விநியோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் இவ்வாறு மூன்று தடவைகளும் குளத்திலிருந்து திறக்கப்ட்ட அதிகளவான நீர் வீண்விரயமாகியதுடன் சுமார் 150 ஏக்கருக்கும் அதிகமான வயல்நிலங்கள் கால போக செய்கைக்கு பயன்படுத்துவதிலும் சிரமங்கள் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கல்மடுக்குளத்திலிருந்து சுமார் ஏழு கிலோமீற்றர் துாரத்திற்கு அப்பாலுள்ள குறித்த பிரதேசத்தில் எந்த ஒரு திணைக்களங்களினதும் அனுமதிகளுமின்றி மாவட்ட பயிர்செய்கை திட்டமிடல்களுக்கு பாதிப்புக்களை ஏற்படுத்தும் வகையிலான செயற்பாடுகள் குறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பல்வேறு தரப்புக்களும் சுட்டிக்காட்டியுள்ளன.
குறித்த விடயம் தொடர்பில் கண்டாவளை பிரதேச செயலகத்தில் அன்மையில் நடைபெற்ற விவசாய குழு கூட்டத்தில் குறித்த விடயம் சுட்டிக்காட்டப்பட்டதையடுத்தையடுத்து சட்ட விரோத செய்கைகளுக்கு எதிராக தர்மபுரம் போலீஸ் நிலையத்தில் பிரதேச செயலகத்தினால் முறைப்பாடு ஒன்றும் பதிவு செய்யப்பட்டுள்ளது.
அத்துடன் கடந்த வெள்ளிக்கிழமை கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற மாவட்ட விவசாய குழு கூட்டத்தில் குறித்த விடயம் தொடர்பில் கலந்துரையாடப்பட்டதுடன் கல்மடுக்குளத்திலிருந்து எவ்வாறு நீர் விநியோகம் மேற்கொள்ளப்பட்டது என்பது தொடர்பில் எழுப்பபட்ட கேள்விகளுக்கு நீர் பாசனத்திணைக்கள அதிகாரிகள் மௌனம் காத்தனர் ஆகவே குறித்த விடயம் ஒரு சில திணைக்கள அதிகாரிகளின் முழுமையான சம்மதத்துடனே முன்னெடுக்கப்ட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டு வருகின்றது.
எனவே குறித்த பயிர் செய்கை தொடர்பில் உரிய திணைக்கள அதிகாரிகள் சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாவட்ட அரசாங்க அதிபர் தெரிவித்துள்ளார்.