குருந்தூர் மலையில் அமைந்துள்ள ஆதி சிவன் ஐயனார் ஆலய விவகாரம் தொடர்பில் உச்ச நீதிமன்றில் இன்னொரு வழக்கு தாக்கல்
தமிழர்களின் பூர்வீக வழிபாட்டிடங்களில் ஒன்றாக அமைந்துள்ள முல்லைத்தீவு தண்ணிமுறிப்பு குருந்தூர் மலையில் அமைந்துள்ள ஆதி சிவன் ஐயனார் ஆலய வளாகத்தில் நீதிமன்ற தடைகளை மீறி பௌத்த விகாரை அமைத்து வருகின்றமை அதன் தெடர்சியாக தமிழர்களின் நாநுாறு ஏக்கர் வரையான விவசாய நிலங்கள் தொல்பொருள் திணைக்களத்தினால் கடந்த வாரம் சுவீகரிக்கும் நோக்கில் எல்லையிடப்பட்டுள்ளன.இலங்கையின் வடக்கே முல்லைத்தீவு மாவட்டத்தின் தண்ணிமுறிப்பு பிரதேசத்திற்கு உட்பட்ட குருந்தூர் மலையில் சைவ மக்களால் தொண்று தொட்டு வழிபடப்பட்டு வந்த ஆதி சிவன் ஐயனார் ஆலய வளாகத்தில் ஆலய எச்சங்களை அகற்றி விட்டு பௌத்த விகாரை அமைக்கப்பட்டு வருகின்றது.இவ்வாறான நிலையில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்ட விகாரை உள்ளிட்ட அனைத்து கட்டுமானங்களையும் அகற்றுமாறும் குறித்த கட்டுமானங்களை அகற்றி நீதிமன்றுக்கு அறிக்கை சமர்ப்பிக்குமாறும் குறித்த பகுதியில் ஆதி சிவன் ஐயனார் ஆலயத்திற்குரிய தரப்பினர் தங்களுடைய வழிபாடுகளை மேற்கொள்வதற்கு எந்த விதத்திலும் தடை விதிக்க கூடாது எனவும் குறித்த இடத்தில் அமைதி குலைவினை ஏற்படாத வகையில் காவல்துறையினர் உரிய பாதுகாப்பினை வழங்கவேண்டும் எனவும் முல்லைதீவு நீதிமன்றம் கடந்த 14.07.2022 அன்று அதிரடி உத்தரவை பிறப்பித்திருந்தது.
இந்த நிலையில் நீதிமன்று வழங்கிய கட்டளையை நடைமுறைபடுத்துவதில் சிக்கல் இருப்பதாகவும் இதனை நடைமுறைப்படுத்தினால் இனங்களுக்கிடையில் குழப்ப நிலை தோன்றும் வாய்ப்பு இருப்பதாகவும் முல்லைத்தீவு காவல்துறையினர் சட்டமா அதிபர் திணைக்களத்திடம் தெரிவித்த நிலையில் முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றில் நகர்தல் பத்திரம் ஒன்றை தாக்கல் செய்து மீண்டும் விளக்கத்துக்கு வந்தது.
இதன்போது வாதிட்ட பிரதி சொலிசிட ஜெனரல் குருந்தூர்மலை ஒரு பௌத்த தொல்லியல் இடம் எனவும் அங்கே புதிய கட்டுமானங்கள் எவையும் இடம்பெறவில்லை எனவும் மாறாக தொல்லியல் சட்டங்களுக்கு உட்பட்டு தொல்லியல் சின்னங்களை பராமரித்து பாதுகாக்கும் செயற்பாடே முன்னெடுக்கப்படுவதாகவும் ஐயனார் ஆலயம் சார்பில் முன்னிலையான சட்டத்தரணிகள் நீதிமன்றை தவறாக வழிநடத்தி இந்த தீர்ப்பை பெற்றுள்ளதாகவும் இந்த ஆலய விவகாரம் தொடர்பில் உச்ச நீதிமன்றில் இன்னொரு வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும் அந்த வழக்கு தொடர்பில் மன்றின் கவனத்துக்கு கொண்டுவராது ஐயனார் ஆலய நிர்வாகம் சார்பில் வாதிட்ட சட்ட தரணிகள் நடந்துகொண்டுள்ளதாகவும் மன்றில் தெரிவித்தார்.
ஐயனார் ஆலயம் சார்பில் வாதிட்ட மூத்த சட்டதரணி அன்ரன் புனிதநாயகம் உள்ளிட்ட சட்ட தரணிகள் குருந்தூர் மலையில் அமைக்கப்பட்டு வருவது புதிய கட்டுமானங்கள் தான் எனவும் தொல்லியல் சின்னங்களை பாதுகாக்கின்றோம் என்ற போர்வையில் புதிய கட்டுமானங்களை அமைத்துள்ளதாகவும் அதற்கான ஆதாரங்களை ஏற்கனவே மன்றின் கவனத்துக்கு கொண்டுவந்துள்ளதாகவும் அத்தோடு இந்த கட்டுமானங்கள் ஏற்கனவே மன்று 2018 இல் வழங்கிய கட்டளையை மீறி அமைக்கபட்டுள்ளதாகவும் மன்றில் சுட்டிகாட்டியதோடு குருந்தூர் மலைக்கு நேரடியாக சென்று அங்கு இடம்பெற்றுவரும் புதிய கட்டுமானத்தை பார்க்க முடியும் எனவும்தெரிவித்ததையடுத்து சட்டமா அதிபர் திணைக்கள அதிகாரிகள் சட்டதரணிகள் கட்டுமானம் இடம்பெற்றுவரும் குருந்தூர் மலைக்கு கள விஜயம் மேற் கொண்டுநிலைகளை பார்வையிட்டதன் பின்னர் மீண்டும் குறித்த வழக்கிற்கான புதிய திருத்திய கட்டளையை பிறப்பித்தமை குறிப்பிடத்தக்கது.இவ்வறான நிலையில் தமிழர்கள் தொன்று தொட்டு விவசயம் செய்து வந்த சுமார் 398 ஏக்கர் விவசாய நிலங்கள் தொல்பொருள் திணைக்களத்தினால் அடையாளப்படுத்தப்பட்டிருக்கின்றது. இவ்வாறு ஆரம்பத்தில் ஆதி சிவன், ஐயனார் ஆலயம் ஆக்கிரமிக்கப்பட்டு அதன் தொடர்ச்சியாக இன்று அந்த மக்களின் வயல் நிலங்களும் ஆக்கிரமிக்கப்பட்டிருப்பதாகவே குறிப்பிடப்பட்டுள்ளது.