முல்லைத்தீவு குருந்தூர் மலைப்பகுதியை சூழவுள்ள பகுதிகளில் உள்ள பொது மக்களின் பல ஏக்கர் விவசாய நிலங்கள் தொல்பொருள் திணைக்களத்தினால் கடந்த வாரம் எல்லையிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
முல்லைத்தீவு குருந்தூர் மலைப்பகுதியை அண்டிய தமிழர்களுக்கு சொந்தமான சுமார் 498 ஏக்கருக்கும் அதிகளவான விவசாய நிலப்பகுதிகள் தொல்லியல் அடையாளப் பகுதிகளாக அடையாளமிடப்படுவது அந்த மக்களின் முற்றுமுழுதான வாழ்வாதாரத்தை பறிக்கும் செயலாகும் என முன்னாள் வடக்கு மாகாண சபை உறுப்பினர் துரைராஜா ரவிகரன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் கருத்து தெரிவித்த முன்னாள் வடக்கு மாகாண சபை உறுப்பினர் முல்லைத்தீவு குருந்தூர் மலைப்பகுதியில் தற்போது நீதிமன்ற கட்டளைகளையும் மீறி விகாரை அமைக்கும் பணிகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருவதுடன் கடந்த வாரம் குறித்த பிரதேசத்தில் உள்ள பொது மக்களுக்கு சொந்தமான விவசாயக் காணிகள் தொல்லியல் திணைக்களத்தினால் எல்லையிடப்பட்டுள்ளன.
குருந்தூர் மலைப்பகுதியில் காணப்படும் 58 காணி குளம் உள்ளிட்ட 78 ஏக்கர் வரையான காணிகளும் தொல்லியல் திணைக்களத்தினால் ஆய்வுக்குரிய பகுதிகளாகவும் அதேபோல தண்ணி முறிப்பு பிரதான வீதியின் பழைய தண்ணி முறிப்பு குடியிருப்பு பகுதி நாகசோலை ஒதுக்க காட்டுப்பகுதி ஆகியவற்றை உள்ளடக்கிய 320 ஏக்கர் விவசாயக் காணிகளும் மேலதிகமாக சுவிகரிக்கும் முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
1984 ஆம் ஆண்டு ஒதிய மலையில் நடைபெற்ற படுகொலை காரணமாக பழைய தண்ணி முறிப்பு பகுதியில் இருந்த குடும்பங்கள் இடம்பெயர்ந்ததுடன் அவர்களுக்கு சொந்தமான குடியிருப்பு நிலங்கள் அவர்களுக்கு சொந்தமான விவசாய நிலங்கள் என்பவற்றை கைவிடப்பட்டு அந்த மக்கள் அங்கிருந்து இடம்பெயர்ந்தனர். ஆனால், இப்பொழுதும் அந்த மக்கள் தங்கள் கைகளிலே காணி ஆவணங்களை வைத்திருக்கின்றார்கள். இது தவிர தண்ணி முறிப்பு அ.த.க பாடசாலை தபாலகம் அரச நெற்களஞ்சிய சாலை பழைய நீர்பாசன கட்டுமனங்கள் உள்ளிட்டவைகள் இப்பொழுதும் சிதைவடைந்த கட்டிடப் பகுதிகளாக இன்றும் காணப்படுகின்றன.
இவ்வாறு தமிழர்களுடைய பூர்வீக நிலங்கள் தொடர்ச்சியாக முல்லைத்தீவு மாவட்டத்தில் தொல்லியல் திணைக்களத்தினாலும் வனவளத்திணைக்களத்தினாலும் அடையாளப்படுத்தப்பட்டு ஆக்கிரமிக்கப்பட்டு வருகின்றன. அதன் தொடர்ச்சியாகவே குருந்தூர் மலைப்பகுதியை சூழவுள்ள பகுதிகளில் உள்ள பொது மக்களின் பல ஏக்கர் விவசாய நிலங்கள் தொல்பொருள் திணைக்களத்தினால் கடந்த வாரம் எல்லையிடப்பட்டுள்ளன இது அந்த மக்களினுடைய வாழ்வாதாரத்தை பறிக்கும் ஒரு செயலாகவே அமைந்திருக்கின்றது என்றும் துரைராஜா ரவிகரன் தெரிவித்துள்ளார்.