இரணைமடுக் குளத்தின் சிறுபோக செய்கையின் வாய்க்கால் பராமரிப்புக்கென விவசாயிகளிடம் இருந்து அறவிடப்பட்ட நிதி செலவிடப்பட்ட விபரம் எதுவும் தமக்கு சமர்ப்பிக்கப்படவில்லை என பிரதி நீர்ப்பாசனத்திணைக்களத்தினால் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கிளிநொச்சி இரணைமடுக் குளத்தின் கீழ் இவ்வாண்டு சிறுபோக செய்கையின் போது வாய்க்கால் பராமரிப்புக்கென விவசாயிகளிடம் இருந்து அறவிடப்பட்ட சுமார் 21 மில்லியன் ரூபா நிதி எவ்வாறு செலவிடப்பட்டது என்ற விபரம் எதுவும் தமக்கு சமர்ப்பிக்கப்படவில்லை என பிரதி நீர்ப்பாசனத்திணைக்களத்தினால் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கிளிநொச்சி இரணைமடுக்குளத்தின் கீழ் இவ்வாண்டு முழுமையான நிலப்பரப்பிலும் அதற்கு மேலதிகமாக கோரக்கன் கட்டு குமரபுரம் கண்டாவளை ஆகிய பகுதிகளும் உள்வாங்கப்பட்டு சிறுபோக செய்கைகள் முன்னெடுக்கப்பட்டன.
கடந்த ஏப்ரல் மாதம் 19ம் திகதி மாவட்ட அரச அதிபர் தலைமையில் நடைபெற்ற பயிர்செய்கை கூட்டத்தில் ஏக்கர் ஒன்றுக்கு வாய்க்கால் பராமரிப்பு நிதியாக ஆயிரம் ரூபா அறவிடுவதாக தீர்மணம் நிறைவேற்றப்பட்டு அதன்படி இரணைமடுக்குளத்தின் கீழான 23 கமக்கார அமைப்புகளினாலும் பயிர்செய்கை மேற்கொள்ளும் விவசாயிகளிடமிருந்து ஏக்கர் ஒன்றுக்கு ஆயிரம் ரூபா வீதம் சுமார் 21 மில்லியன் ரூபா அறவிடப்பட்டுள்ளது.
இரணைமடுக்குளத்தின் கீழுள்ள நீர்ப்பான வாய்க்கால்களை பராமரிப்பதற்காகவே குறித்த நிதிகள் அறவிடப்பட்டன மேற்படி நிதி விவரம் தொடர்பில் பிரதி நீர்பாசன பணிப்பாளர் அவர்களிடம் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலம் கோரியபோது இந்த நிதியானது கமக்கார அமைப்புகளினாலே அறவிடப்பட்டது எனவும் அது தொடர்பான செலவு விவரங்கள் எவையும் தமக்கு சமர்ப்பிக்கப்படவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது இவ்வாறு விவசாயிகளிடமிருந்து ஏக்கர் ஒன்றுக்கு ஆயிரம் ரூபா வீதம் அறவிடப்பட்ட சுமார் 21 மில்லியன் ரூபா நிதியும் எந்த விதமான திணைக்களத் தலைவர்களினதும் அனுமதிகளுமின்றி செலவிடப்பட்டுள்ளன.
மாவட்ட அரசாங்க அதிபர் தலைமையிலான பயிர் செய்கை குழுவின் தீர்மானத்திற்கு அமைவாக இவ்வாறு பெருந்தொகை நிதிஅறவிடப்பட்டு ஒரு திணைக்களத்திற்கு சொந்தமான வாய்க்கல்களை பராமரிப்பது அல்லது துப்பரவு செய்வது தொடர்பிலான விபரங்கள் வெளிப்படைத்தன்மையின்மை தொடர்பில் பல்வேறு சந்தேகங்களை ஏற்படுத்தியுள்ளது.