மார்பக சிகிச்சை நிலையத்தின் செயல்பாடுகளுக்கு மாவட்ட பொது வைத்தியசாலை நிர்வாகத்தால் இடை இடையூறு ஏற்படுத்தப்பட்டுள்ளது
கிளிநொச்சி பிராந்தியசுகாதார சேவைகள் பணிமனையின் கீழ் இயங்கி வந்த மார்பக சிகிச்சை நிலையத்தின் செயல்பாடுகளுக்கு மாவட்ட பொது வைத்தியசாலை நிர்வாகத்தால் இடையூறு ஏற்படுத்தப்பட்டுள்ளதுடன் வைத்திய சிகிச்சைப்பிரிவு உபகரணங்களை ஏற்றிய பாரஊர்தியும் வைத்திய சாலை நிர்வாகத்தால் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளதாக பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளரால் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கிளிநொச்சி பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் பணிமனையின் கீழ் தற்காலிகமாக கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலையில் இயங்கி வந்த மார்பக சிகிச்சை பிரிவு அண்மையில் ஏற்பட்ட தீ விபத்தினால் எரிந்து முற்றாக நாசமாகியுள்ளது.
இந்த நிலையில் மீளவும் தற்காலிக இடமொன்றில் குறித்த சிகிச்சை நிலையம் பெரும் நெருக்கடிகளுக்கு மத்தியில் இயங்கி வந்துள்ளது. இதன் நிர்வாகச் செயற்பாடுகள் அனைத்தையும் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் பணிமனையினாலே நிர்வாகிக்கப்பட்டு வந்துள்ளது.
இந்த நிலையில் குறித்த சிகிச்சை பிரிவினை கிருஷ்ணபுரத்தில் அமைந்துள்ள தொற்று நோயியல் சிகிச்சை வளாகத்துக்கு மாற்றுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு அதற்கான வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்ட நிலையில் தற்காலிகமாக இயங்கிய கிளிநொச்சி வைத்தியசாலை வளாகத்தில் இருந்து அதற்கான உபகரணங்கள் மற்றும் பொருட்களை ஏற்றிச் சென்ற பார ஊர்தி வைத்தியசாலை நிர்வாகத்தால் வியாழக்கிழமை (01-09-2022) தடுத்து நிறுத்தப்பட்டுள்ளதுடன் இடைஞறுகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளது.