என்ஜின் கோளாறால் தரையிறங்கிய கிளைடர் விமானம் விபத்து
ஐக்கிய அரபு நாட்டின் அபுதாபிக்கு சிறிய ரக கிளைடர் விமானம் ஒன்று சென்றது. ஒற்றை என்ஜின் கொண்ட இந்த விமானம் தரை இறங்கும்போது என்ஜினில் திடீர் கோளாறு ஏற்பட்டது. எனவே விமானி விமானத்தை தலைநகரில் உள்ள தனியார் விமான நிலையத்தில் தரை இறக்குவதற்கு பதில் அபுதாபியில் உள்ள ஷேக் சயீத் கிராண்ட் பகுதியில் தரை இறக்கினார். அப்போது விமானம் அங்குள்ள வாகன நிறுத்த பகுதியில் மோதி விபத்துக்குள்ளானது. இதில் விமானத்தின் இறக்கை பகுதி சேதமானது.
இந்த விபத்தில் விமானி லேசான காயங்களுடன் உயிர்தப்பியதாக மீட்பு படையினர் தெரிவித்தனர். விமானத்தில் வேறு யாரும் பயணிகள் இருந்தார்களா? என்ற தகவலை அவர்கள் வெளியிடவில்லை. தொழில்நுட்ப கோளாறு காரணமாகவே விமானம் விபத்துக்குள்ளானதாக விமான நிலைய ஆணையம் தெரிவித்து உள்ளது. இது தொடர்பாக யாரும் வதந்தி பரப்ப கூடாது எனவும் அவர்கள் எச்சரித்து உள்ளனர். துபாயில் இதற்கு முன்பு கடந்த 2019-ம் ஆண்டு மே மாதம் விமான விபத்து ஏற்பட்டதில் 4 பேர் பலியானார்கள்