எரிபொருள் சேகரிப்பு களஞ்சியசாலை காணியை United Fuel Mart (Pvt) Ltd என்னும் தனியார் நிறுவனத்திற்கு வழங்க வேண்டுமென்ற வடமாகான ஆளுனர் எடுத்துவருவது கண்டனத்துக்குரியது என பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் அவர்கள் தெரிவிப்பு
கிளிநொச்சி நகரத்திலுள்ள இலங்கைப் பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் பிரதான எரிபொருள் சேகரிப்பு களஞ்சியசாலை காணியை United Fuel Mart (Pvt) Ltd என்னும் தனியார் நிறுவனத்திற்கு வழங்க வேண்டுமென்ற முன்முனைப்புகளை வடமாகான ஆளுனர் எடுத்துவருவது கண்டனத்துக்குரியது என பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் அவர்கள் தெரிவித்துள்ளதுடன் இது தொடர்பில் கடிதமொன்றினையும் வடமாகான ஆளுனருக்கு அனுப்பிவைத்துள்ளார்.
அதாவது கிளிநொச்சி நகர கிராம அலுவலர் பிரிவில், காக்காகடைச் சந்திக்கு அருகிலுள்ளதும், ஆரம்பத்தில் இலங்கைப் பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் பிரதான எரிபொருள் சேகரிப்பு களஞ்சியசாலை அமைந்திருந்ததுமான, ஒரு ஏக்கர் 3றூட் 14பேர்ச் விஸ்தீரணமும், நில அளவை வரைபடத்தின்படி 245 ஆம் இலக்கமும் உடைய அரச காணியை (தற்போதுள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்துடன் இணைந்ததாக) United Fuel Mart (Pvt) Ltd என்னும் தனியார் நிறுவனத்திற்கு வழங்க வேண்டுமென்ற முன்முனைப்புகள் தங்களால் மேற்கொள்ளப்படுவதாகவும், தொடர்புடைய அதிகாரிகளுக்கு அதிகூடிய அழுத்தங்களைப் பிரயோகிக்கப்படுவதாகவும் அறிய முடிகிறது.மேற்குறித்த காணியை இலங்கைப் பெற்றோலியக் கூட்டுத்தாபனத்திற்கு நீண்டகாலக் குத்தகை அடிப்படையில் வழங்குவதென்ற தீர்மானம் 2020.09.17 ஆம் திகதிய கிளிநொச்சி மாவட்ட காணிப்பயன்பாட்டுத் திட்டமிடல்க் குழுக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளதுடன் 2022.01.13 ஆம் திகதிய கிளிநொச்சி மாவட்ட ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டத்திலும் பிரஸ்தாபிக்கப்பட்ட நிலையில், அத் தீர்மானங்களை மீறி, காணிப் பயன்பாட்டுத் திட்டமிடல்க் குழுவினதோ, மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவினதோ அனுமதி பெறப்படாது அதே காணியை United Fuel Mart (Pvt) Ltd என்னும் தனியார் நிறுவனமொன்றுக்கு வழங்க முற்படுவது இந்த மாவட்டத்தின் அரச நிர்வாக அலகுகளின் அதிகார வரம்புகளை கேள்விக்கு உட்படுத்துவதாக அமைந்துள்ளது. காணித்தேவைகளைப் புறந்தள்ளி, அரசியல் பின்புலத்தையும், பண பலத்தையும் பயன்படுத்தி இந்த மாவட்டத்தின் வளங்களை அபகரிக்க முற்படும் தனிநபர்களின் செயற்பாடுகளை தடுத்து நிறுத்த, காணி அதிகாரமுள்ள மாகாண ஆளுநராக தாங்கள் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று தங்களைத் தயவுடன் கேட்டுக் கொள்கின்றேன்.எனவும் மேற்படி கடிதத்தில் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.