கிளிநொச்சி வன்னேரிக்குளம் விவசாயிகள் தற்போது சிறுபோகத்தில் அறுவடை செய்யும் நெல்லை உலர வைப்பதற்கான போதிய நெல் உலரவிடும் தளங்கள் இன்றியும் அறுவடை செய்யும் நெல்லை சந்தைப்படுத்த முடியாமலும் பெரும் சிரமங்களை எதிர்நோக்கி வருவதாக தெரிவித்துள்ளனர்.
கிளிநொச்சி மாவட்டத்தின் மிகவும் பின்தங்கிய கிராமங்களில் ஒன்றாக காணப்படுகின்ற வன்னேரிக்குளத்தின் கீழுள்ள விவசாயிகள் சிறுபோக அறுவடையில் ஈடுபட்டு வருகின்றனர் இவ்வாறு அறுவடைகள் இடம்பெற்று வரும் நிலையில் அறுவடைக்கு தேவையான எரிபொருள் இன்மை அறுவடைசெய்யும் நெல்லைச் சந்தைப்படுத்த முடியாமை நெல்லை உலர விடுவதற்கான தள வசதிகள் இன்மை என்று பல் வேறு இடர்பாடுகளுக்கு முகம் கொடுத்து வருவதாக தெரிவித்துள்ளனர்.
தற்போது மழையுடனான காலநிலை நிலவி வருவதனால் மேலும் பாதிப்புக்களை எதிர் கொள்வதுடன் நெல்லை அறுவடை செய்வதில் பெரும் சிரமங்களை எதிர்நோக்கி வருதாகவும் தெரிவித்துள்ளனர்.குறித்த அறுவடை செய்யும் நெல்லை சந்தைப்படுத்தக் கூடிய வசதி வாய்ப்புகள் இதுவரை இல்லை தனியாரோ அல்லது நெல் சந்தைப்படுத்தும் சபையோ தங்களுடைய கிராமங்களுக்கு வருகை தரவில்லை என்றும் இதனால் நெல்லை சந்தைப்படுத்தப்பட முடியாத நிலையில் பெரும் சிரமங்களை எதிர்நோக்கி வருவதாகவும் தெரிவித்துள்ளனர்.
குறிப்பாக தமது பிரதேசத்தில் காட்டு யானைகளின் தாக்கம் மற்றும் கிருமி நாசினிகள் களை நாசினிகள் இரசாயன உரம் என்பவற்றுக்கான பெரும் தட்டுப்பாடுகள் நிலவி வரும் இந்த நிலையில்பெரும் பொருளாதார நெருக்கடிகளுக்கு மத்தியில் அதிகூடிய விலைகளிலே இவற்றைப் பெற்று சிறு போக செய்கை மேற்கொண்டு இவ்வாறு அறுவடை செய்த நெல்லை விற்பனை செய்தாலும் தங்களுக்கு அதனால் எதிர்பார்த்த எந்த ஒரு இலாபமும் கிடைக்காத நிலையே ஏற்படும் என்றும் தெரிவித்துள்ளனர்.