முல்லைத்தீவு மாவட்டத்திற்கான தமிழக அரசினால் இலங்கைக்கு அனுப்பப்பட்ட மூன்றாம் கட்ட நிவாரண பொருட்கள் கிடைக்கப் பெற்றுள்ளன
முல்லைத்தீவு மாவட்டத்திற்கான தமிழக அரசினால் இலங்கைக்கு அனுப்பப்பட்ட மூன்றாம் கட்ட நிவாரண பொருட்களில் 100, 000 கிலோக்கிராம் அரிசி மற்றும் 3,375 கிலோகிராம் பால்மா பொதிகள் என்பன இன்று (04-08-2022) கிடைக்கப் பெற்றுள்ளன.
தமிழக அரசினால் இலங்கைக்கு அனுப்பப்பட்ட மூன்றாம் கட்ட நிவாரண பொருட்களில் 100, 000 கிலோக்கிராம் அரிசி மற்றும் 3,375 கிலோகிராம் பால்மா பொதிகள் கனரக வானனமொன்றில் முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தை இன்று(04-08-2022) பகல் வந்தடைந்துள்ளன.
உணவு ஆணையாளர் திணைக்களம் ஊடாக முல்லைத்தீவு மாவட்டத்திற்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ள குறித்த நிவாரண பொருட்களை மாவட்ட அரசாங்க அதிபர் க.விலநாதன் அவர்கள் பொறுப்பேற்றுக் கொண்டதையடுத்து, பிரதேச செயலகங்களிற்கு பகிர்ந்தளிக்கும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன.
இதன்படி கரைதுறைப்பற்று பிரதேச செயலர் பிரிவில் 3,100 குடும்பங்களுக்கு அரிசியும் 1,044 குடும்பங்களுக்கு பால்மாவும், துணுக்காய் பிரதேச செயலர் பிரிவில் 900 குடும்பங்களுக்கு அரிசியும் 305 குடும்பங்களுக்கு பால்மாவும், மாந்தை கிழக்கு பிரதேச செயலர் பிரிவில் 600 குடும்பங்களுக்கு அரிசியும் 205 குடும்பங்களுக்கு பால்மாவும், ஒட்டிசுட்டான் பிரதேச செயலர் பிரிவில் 1,600 குடும்பங்களுக்கு அரிசியும் 540 குடும்பங்களுக்கு பால்மாவும், புதுக்குடியிருப்பு பிரதேச செயலர் பிரிவில் 3,000 குடும்பங்களுக்கு அரிசியும் 1,011 குடும்பங்களுக்கு பால்மாவும், வெலிஓயா பிரதேச செயலர் பிரிவில் 800 குடும்பங்களுக்கு அரிசியும் 270 குடும்பங்களுக்கு பால்மாவும் இவ்வாறு பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளது.
இன்றைய தினம் புதுக்குடியிருப்பு பிரதேச செயலக உணவுப்பொருட்கள் வந்தடையாததால் ஏனைய ஐந்து பிரதேசங்களுக்கான நிவாரண பொருட்கள் பிரதேச செயலாளர்களிடம் கையளிக்கப்பட்டுள்ளதைத் தொடர்ந்து பிரதேச செயலகங்களுடாக அவை வழங்கி வைக்கப்படும்.
குறித்த உதவித் திட்டமானது பொருளாதார நெருக்கடியில் சிக்கித்தவித்துள்ள இலங்கையர்களுக்கு உதவிக்கரம் நீட்டும் நோக்கில் நிவாரண பொருட்களை வழங்குவதற்கு, கடந்த ஏப்ரல் மாதம் சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் முன்வைத்த தீர்மானத்திற்கு பலரும் ஆதரவு தெரிவித்திருந்தனர்.
இதற்கமைய, இரு கட்டங்களாக நிவாரண பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்ட நிலையில், இன்று மூன்றாம் கட்ட நிவாரண பொருட்கள் முல்லைத்தீவை வந்தடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.