
இலங்கைக்கான விமானசேவையை இடைநிறுத்தியது ரஸ்யாவின் ஏரோஃப்ளோட்
ரஸ்யாவின்ஏரோஃப்ளோட் இலங்கைக்கான தனது சேவைகளை இடைநிறுத்துவதாக அறிவித்துள்ளது. இலங்கை அதிகாரிகள் தங்களது எயர்பஸ் ஏ330ஜெட் விமானத்தினை தடுத்துவைத்துள்ளதை தொடர்ந்து இந்த நடவடிக்கையை எடுத்துள்ளதாக ஏரோஃப்ளோட்அறிவித்துள்ளது.
விமானத்தின் இலங்கைக்கான தடையற்ற பயணம் குறித்து உறுதியற்ற நிலை காணப்படுவதால் இலங்கைக்கான விமானசேவையை உடனடியாக நிறுத்துவதாக அறிக்கையொன்றில் ஏரோஃப்ளோட்தெரிவித்துள்ளது. இலங்கைக்கான பயணத்திற்கான விமான பயணச்சீட்டுகள் விற்பனை இடைநிறுத்தப்படுவதாகவும் ஏரோஃப்ளோட் அறிவித்துள்ளது.
ஜூன் இரண்டாம் நான்காம் ஐந்தாம் திகதிகளில் கொழும்பிலிருந்து பயணிப்பதற்கான விமானபயணச்சீட்டுகளை கொண்டுள்ள பயணிகள் இன்றும் நாளையும் இலங்கையிலிருந்து அழைத்துவரப்படுவார்கள் எனவும் அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது. அவர்களை கொண்டுவருவதற்கான விமானங்கள் கொழும்பிற்கு பயணிகள் இன்றி செல்லவுள்ளன எனவும் அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.