
திருகோணமலையில் வருமானம் குறைந்த குடும்பங்களுக்கு வாழ்வாதார உதவிகள் வழங்கி வைப்பு
திருகோணமலை மாவட்டத்தில் வருமானம் குறைந்த 546 வறிய குடும்பங்களுக்கான உலர் உணவுப் பொதிகள் வழங்கி வைக்கும் ஆரம்பகட்ட நிகழ்வு இன்று (02) திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபர் அலுவலகத்தில் திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபர் பி.எச்.என்.ஜயவிக்ரம அவர்களின் தலைமையில் இடம்பெற்றது.
திருகோணமலை மாவட்டத்தின் கோமரன்கடவெவ, மொறவெவ மற்றும் குச்சவெளி ஆகிய பிரதேச செயலகப் பிரிவுகளில் உள்ள பொருளாதார ரீதியாக நலிவுற்ற நாட்கூலி வேலையை மேற்கொள்ளும் குடும்பங்களுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டு இப்பொதிகள் வழங்கி வைக்கப்படவுள்ளது.
இதனடிப்படையில் குச்சவெளிப் பிரதேச சபையைச் சார்ந்த இரு பயனாளிகளுக்கான உலர் உணவுப் பொதிகளை மாவட்ட அரசாங்க அதிபர் இன்று வழங்கி வைத்தார்.
இவ் உலர் உணவுப் பொதி ஒன்றின் பெறுமதி ரூ 6190 ஆகும்.
மேலும் குறித்த பிரதேச செயலகப் பிரிவுகளிலுள்ள போஷாக்குக் குறைவான 80 சிறுவர்களுக்கும், 89 கர்ப்பிணித் தாய்மாருக்கும் தலா 7500 ரூபா பெறுமதியான உலர் உணவுப் பொதிகள் வழங்கி வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.