கனடாவில் அவசர நிலை பிரகடனம்
கனடாவில் எல்லை தாண்டி செல்லும் லாரி டிரைவா்கள் கட்டாயம் கொரோனா தடுப்பூசி செலுத்தியிருக்க வேண்டும் என்ற விதிமுறையை எதிா்த்து, தலைநகா் ஒட்டாவாவில் ‘சுதந்திர வாகன அணிவகுப்பு' என்ற பெயரில் லாரி டிரைவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனா். இந்த போராட்டம் கடந்த 10 நாட்களாக நடைபெற்று வருகிறது. அந்த போராட்டத்துக்கு பல்வேறு தரப்பினரும் ஆதரவு தெரிவித்ததால், அது அரசின் கொரோனா கட்டுப்பாடுகளுக்கு எதிரான போராட்டமாக உருவெடுத்தது. இதனால் தலைநகரில் நிலைமை மோசமானதை தொடர்ந்து பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, குடும்பத்துடன் ரகசிய இடத்துக்கு மாற்றப்பட்டார்.
இந்த நிலையில் மக்களின் இந்த போராட்டம் “உண்மைக்கு ஒரு அவமானம்” என கூறி பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். கடந்த ஒரு வாரமாக நடைபெற்று வரும் இந்த போராட்டத்தில், நேற்று விடுமுறை தினம் என்பதால் கட்டாய தடுப்பூசி முறைக்கு எதிர்ப்பு தெரிவிக்க பல்லாயிரக்கணக்கான மக்கள் ஒட்டாவா நகரத்தை முற்றுகையிட்டு போராட்டத்தை மேலும் தீவிரப்படுத்தினர். இதனால் தொடர்ந்து 10வது நாளாக போராட்டம் தீவிரமடைந்து வருகிறது.
இந்த போராட்டத்திற்கு முன்னாள் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் உள்ளிட்ட சிலர் தங்களது ஆதரவை தெரிவித்துள்ளனர்.
பெருந்திரளானோர் ஒன்று கூடி நடத்தி வரும் இந்த போராட்டத்தால் ஒட்டாவா நகரம் நிலை குலைந்து போய் உள்ளது.இந்நிலையில் அசம்பாவிதங்கள் ஏதும் நடக்காமல் இருக்க முன்னெச்சரிக்கையாக அவசர நிலை பிரகடனப்படுத்தப்படுவதாக ஒட்டாவா நகர மேயர் ஜிம் வாட்சன் நேற்று அறிவித்தார்.
அவசர நிலையை அறிவித்ததற்கு பின் அவர் கூறுகையில்,“போராட்டம் காரணமாக அவசர நிலை பிரகடனப்பட்டிருப்பது ஒட்டாவா நகரவாசிகளின் பாதுகாப்பு கேள்விக்குறியாகி இருப்பதை வெளிக்காட்டுகிறது. அதனை உறுதி செய்வதற்காக அரசிடம் இருந்து ஆதரவு நடவடிக்கைகளை எதிர்பார்த்து உள்ளோம்” என்று தெரிவித்தார்.