கனடாவில் தடுப்பூசி போடாதவர்களுக்கு மருத்துவ வரி
கனடாவில் தடுப்பூசி செலுத்திக்கொள்ளாத நபர்களுக்கு மருத்துவரி விதிக்க அங்குள்ள ஒரு மாகாண அரசு முடிவு செய்துள்ளது. கனடாவில் அதிக மக்கள் தொகையை கொண்ட 2-வது மாகாணமான கியூபெக்கில் கொரோனா தொற்று பாதிப்பு அதிதீவிரமாக இருந்து வருகிறது. நாட்டிலேயே அதிக அளவில் கொரோனா உயிரிழப்புகள் அங்குதான் நிகழ்ந்துள்ளது.
நேற்றைய நிலவரப்படி அங்கு இதுவரை கொரோனா தொற்றால் 12 ஆயிரத்து 28 பேர் உயிரிழந்துள்ளனர். எனவே உயிரிழப்புகளை தவிர்ப்பதற்கு அந்த மாகாண அரசு கொரோனா தடுப்பூசி செலுத்துவதில் தீவிர கவனம் செலுத்தி வருகிறது. அந்த வகையில் அந்த மாகாணத்தில் 85 சதவீதத்துக்கும் அதிகமானோர் குறைந்தபட்சம் முதல் டோஸ் தடுப்பூசியை செலுத்திக்கொண்டுள்ளனர்.
சுமார் 13 சதவீதம் பேர் மட்டுமே முதல் டோஸ் தடுப்பூசி கூட செலுத்திக்கொள்ளமால் உள்ளனர். அவர்களையும் தடுப்பூசி செலுத்திக்கொள்ள வைப்பதற்கு மாகாண அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக கியூபெக் மாகாணத்தில் தடுப்பூசி செலுத்திக்கொள்ளாதவர்களுக்கு மருத்துவ வரி விதிக்க முடிவு செய்துள்ள மாகாண பிரதமர் பிராங்கோயிஸ் லெகால்ட் அறிவித்துள்ளார்.
பத்திரிகையாளர்களிடம் இதுகுறித்து அவர் கூறுகையில் “தடுப்பூசியின் முதல் டோஸ் பெறாதவர்கள் வரி செலுத்த வேண்டும். கட்டணம் இன்னும் முடிவு செய்யப்படவில்லை. சில தியாகங்களைச் செய்து தடுப்பூசி போட்டுக்கொண்ட மக்களுக்கு இது நியாயமானதாக இருக்கும் என்று நினைக்கிறேன். நாம் அவர்களுக்கு கடன்பட்டிருக்கிறோம் என்று நான் நினைக்கிறேன்” என கூறினார்.