ஹர்பஜன் சிங் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவிப்பு
இந்தியாவின் வெற்றிகரமான சுழற்பந்து வீச்சாளர்களில் ஒருவரான ஹர்பஜன் சிங், அனைத்து வகையான கிரிக்கெட்டிலிருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.
அவர் தன்னுடைய டுவிட்டர் பதிவில் கூறியதாவது, அனைத்து நிகழ்வுகளும் முடிவுக்கு வருகிறது. என் வாழ்க்கையில் அனைத்தையும் கொடுத்த கிரிக்கெட் விளையாட்டில் இருந்து விடைபெறுகிறேன். எனது இந்த 23 ஆண்டுகால பயணத்தை அழகாகவும் மறக்கமுடியாததாகவும் மாற்றிய அனைவருக்கும் நன்றி கூற விரும்புகிறேன் என்று அந்த பதிவில் அவர் தெரிவித்துள்ளார்.
பஞ்சாபைச் சேர்ந்த 41 வயதான ஹர்பஜன் சிங், இந்தியாவிற்காக 103 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 417 விக்கெட்டுகளையும், 236 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 269 விக்கெட்டுகளையும், 28 டி20 போட்டிகளில் விளையாடி 25 விக்கெட்டுகளையும் எடுத்துள்ளார். மேலும் 163 ஐ.பி.எல் போட்டிகளில் விளையாடி 150 விக்கெட்டுகளை எடுத்துள்ளார்.
1998 ஆம் ஆண்டு ஷார்ஜாவில் நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் போட்டியின் போது முதன் முறையாக அறிமுகமான ஹர்பஜன் சிங், கடைசியாக 2016 ஆம் ஆண்டு மார்ச் மாதம் டாக்காவில் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அணிக்கு எதிரான டி20 போட்டியின் போது நாட்டிற்காக விளையாடினார்.
மார்ச், 2001 இல் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக, ஒரு இந்தியரின் முதல் டெஸ்ட் ஹாட்ரிக் உட்பட, மூன்று டெஸ்ட் போட்டிகளில் 32 விக்கெட்டுகளை வீழ்த்தியது அவரது சர்வதேச கிரிக்கெட் வாழ்க்கையில் மறக்கமுடியாத தருணங்களில் ஒன்றாகும்.