செரிமானப் பிரச்சினையை தீர்க்கும் வாழைப்பழம்
நம் முன்னோர்கள் எந்த விசேஷமாக இருந்தாலும் வாழைப்பழத்திற்கு முக்கியத்துவம் கொடுத்து வாங்கி வைத்து, பின்னர் அதை உண்பார்கள். வருடம் முழுவதும் கிடைக்கக்கூடியது வாழைப்பழம். 100 கிராம் பழத்தில் 90 கலோரியை இது தருகிறது.
வாழைபழத்தில் வைட்டமின்கள், தாது உப்புக்கள் இதில் நிறைவாக உள்ளன. வாழையில் உள்ள ‘பிரக்டோஸ்’ போன்ற எளிய சர்க்கரை, உடலுக்கு உடனடி ஆற்றலை அளிக்கிறது. விளையாட்டு வீரர்கள், தடகள வீரர்கள் இதை தினமும் எடுத்துக்கொள்ளும்போது இயற்கையான ‘உடனடி எனர்ஜி’ கிடைக்கும். உடல் எடை குறைவாக உள்ள குழந்தைகளுக்கு தினசரி வாழைப்பழம் கொடுப்பது நல்லது. இதில் அதிக அளவில் நார்ச்சத்து உள்ளதால், செரிமானப் பிரச்சினை உள்ளவர்கள் எடுத்துக்கொள்ளலாம்.
வாழைப்பழத்தில் உள்ள வைட்டமின் பி-6, ரத்த சோகை போன்ற குறைபாடுகள் நெருங்காமல் பார்த்துக்கொள்ளும். இதய ரத்தக் குழாய் பாதிப்பு மற்றும் பக்கவாதம் ஏற்படுவதற்கான வாய்ப்பை குறைக்கும்.
தாது உப்புக்களைப் பொறுத்தவரையில், தாமிரம், மெக்னீசியம், மாங்கனீஸ் ஆகியவை குறிப்பிடத்தகுந்த அளவில் உள்ளன. மெக்னீசியம் நம் எலும்புகளின் உறுதிக்கும், இதய பாதுகாப்புக்கும் அவசியமானது தாது உப்பு.
100 கிராம் வாழைப்பழத்தில் 358 மில்லி கிராம் பொட்டாசியம் உள்ளது. இது, இதயத்துடிப்பை கட்டுக்குள் வைத்திருப்பது, ரத்த அழுத்தத்தை கட்டுக்குள் வைத்திருப்பது போன்றவற்றை செய்கிறது.