வெள்ளத்தால் தத்தளிக்கும் கனடா
கனடாவின் மேற்கு மாகாணத்தை தடம் புரட்டி போட்டுள்ள வெள்ளப் பேரழிவினால், சுமார் 18,000பேர் வெள்ள நீரில் சிக்கித் தவிப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மண்சரிவுகள், வீதிகள், வீடுகள், பாலங்கள் மற்றும் பிற முக்கிய உட்கட்டமைப்புகளை அழித்த இந்த பேரழிவு, நாட்டின் விலையுயர்ந்த இயற்கை பேரழிவு என விபரிக்கப்பட்டுள்ளது.
வெள்ளம் மற்றும் மண்சரிவுகள் முக்கிய போக்குவரத்து பாதைகளை அடைத்துள்ளன. இதனால் மாகாணத்தில் ஆயிரக்கணக்கானோர் சிக்கித் தவிக்கின்றனர்.
வன்கூவரை மாகாணத்தின் உட்புறத்துடன் இணைக்கும் நெடுஞ்சாலை 7, மாற்று, ஒற்றைப் பாதை போக்குவரத்திற்கு மீண்டும் திறக்கப்பட்டுள்ளதாக போக்குவரத்து அமைச்சர் ரொப் பிளெமிங் தெரிவித்தார். மற்றொரு முக்கிய பாதை வார இறுதிக்குள் திறக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது, மற்ற நெடுஞ்சாலைகள் சரிசெய்ய பல மாதங்கள் ஆகலாம்.
கனேடிய மற்றும் அமெரிக்க எல்லை அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருவதாக மத்திய போக்குவரத்து அமைச்சர் ஒமர் அல்காப்ரா தெரிவித்தார்
வன்கூவரில் உள்ள மிகப்பெரிய கனேடிய துறைமுகத்திற்கான அணுகலை இந்த வெள்ளம் துண்டித்ததால், உலகளாவிய விநியோகச் சங்கிலி சீர்குலைந்துள்ளது.
கனடாவின் அவசரகால தயார்நிலை அமைச்சர் பில் பிளேயர், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சமூகங்களில் முக்கியமான உள்கட்டமைப்பை மீண்டும் கட்டியெழுப்பவும் மீட்டெடுக்கவும் மத்திய அரசாங்கம் பிரிட்டிஷ் கொலம்பியாவுக்கு உதவும் என்று கூறினார்.