கொல்கத்தாவில் ரயில்வே அலுவலக கட்டிடத்தில் பயங்கர தீ விபத்து
கொல்கத்தாவில் பல மாடி கட்டிடத்தின் 13’வது மாடியில் இன்று மாலை பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. தீயணைப்பு படை சம்பவ இடத்திலேயே உள்ளது மற்றும் ஸ்ட்ராண்ட் சாலையில் தீயை அணைப்பதற்கான முயற்சிகள் நடந்து வருகின்றன.
அதிகாரிகளின் ஆரம்ப அறிக்கைகள் இதுவரை காயங்கள் எதுவும் ஏற்படவில்லை என்று தெரிவிக்கின்றன. கொல்கத்தாவின் ஸ்ட்ராண்ட் சாலையில் உள்ள புதிய கொயிலகாட் கட்டிடத்தில் இந்த தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த கட்டிடத்தில் ரயில்வே அலுவலகங்கள் உள்ளது குறிப்பிடத்தக்கது.
இன்று மாலை 6.10 மணியளவில் கொல்கத்தா காவல்துறையினர் முதலில் தீ விபத்து குறித்து எச்சரிக்கப்பட்டனர். குறைந்தது 10 தீயணைப்பு இயந்திரங்கள் சம்பவ இடத்திற்கு விரைந்தன. நிலைமையை கட்டுக்குள் கொண்டுவருவதற்கான பணிகள் இன்னும் நடைபெற்று வருவதாக தீயணைப்பு படையின் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். எனினும் நியூ கொயிலகாட் கட்டிடத்தில் ஏற்பட்ட தீ விபத்துக்கான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை.
கிழக்கு ரயில்வே செய்தித் தொடர்பாளர் கமல் தியோ, கொல்கத்தாவின் ஸ்ட்ராண்ட் சாலையில் உள்ள புதிய கொயிலகாட் கட்டிடத்தில் கிழக்கு ரயில்வே மற்றும் தென்கிழக்கு ரயில்வே அலுவலகங்கள் உள்ளன என்பதை உறுதிப்படுத்தினார். அதன் தரை தளத்தில் கணினிமயமாக்கப்பட்ட டிக்கெட் முன்பதிவு மையமும் உள்ளது.
“நாங்கள் தீயை எதிர்த்துப் போராடுகிறோம், கட்டிடத்தின் பெரும்பாலான தளங்களில் இருந்து நாங்கள் அனைவரையும் வெளியேற்றியுள்ளோம்” என்று கொல்கத்தா காவல்துறை அதிகாரி தெரிவித்தார்.