ஸ்டாலினோட வாக்குறுதிகள் எல்லாமே அட்டக்காப்பி : கமல்ஹாசன்
சட்டப்பேரவை தேர்தலையொட்டி திருச்சியில் திமுக சார்பில் மாபெரும் பொதுக்கூட்டம் நேற்று நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் 7 துறைகள் 7 உறுதிமொழிகள், 10 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு உள்ளிட்ட பல்வேறு வாக்குறுதிகளை திமுக தலைவர் ஸ்டாலின் அறிவித்தார். மேலும், ரேஷன் கார்டு உள்ள குடும்ப தலைவிகளுக்கு மாதாந்தோறும் ரூ.1,000 உரிமைத் தொகை வழங்கப்படும் என்ற அறிவிப்பையும் வெளியிட்டார்.
இந்த நிலையில், திமுக தலைவர் ஸ்டாலினின் இந்த அறிவிப்பை மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் கடுமையாக விமர்சித்துள்ளார்.
மக்கள் நீதி மய்யத்தின் திட்டங்களை திமுக தலைவர் ஸ்டாலின் அப்படியே காப்பிடியத்து வருகிறார். நாமே தீர்வு என்றால் அவர் ஒன்றிணைவோம் வா எனக் கூறினார். இல்லத்தரசிகளுக்கு ஓய்வூதியம் அளிக்கப்படும் என நாங்கள் அறிவித்தோம். அவர் தற்போது உரிமைத் தொகை என அறிவித்திருக்கிறார். அதுமட்டுமல்லாமல், 7 உறுதி மொழி உள்பட அனைத்தையும் ஸ்டாலின் காப்பியடித்துள்ளார். ஸ்டாலின் பேசுவது, அறிவிப்பது எல்லாமே நாங்கள் சொல்லிக் கொடுப்பது போலவே இருக்கிறது. எங்களின் திட்டங்கள் மற்றும் அறிக்கைகள் எழுதப்பட்ட காகிதம் திமுகவிற்கு துண்டு சீட்டாக மாறிவிடுகிறது. அவர் வெளியிட்ட எந்த திட்டமும் அவருடைய சொந்த திட்டம் இல்லை, என கமல்ஹாசன் கூறினார்.