கைவிடப்பட்ட நீளவெட்டியாகுளத்தினை புனரமைப்பதற்கு இரண்டு தடவைகள் நிதி வழங்குவதற்கான அனுமதி பத்திரங்கள் கண்டறியப்பட்டுள்ளது
முல்லைத்தீவு மாந்தை கிழக்கில் வனவள திணக்களத்தின் கட்டுப்பட்டிலுள்ள கைவிடப்பட்ட நீளவெட்டியாகுளத்தினை புனரமைப்பதற்கு இரண்டு தடவைகள் நிதி விடுவிக்கப்பட்டுள்ளதுடன் குறித்த குளத்தின் கீழ் 18 ஏக்கர் காணிகள் உள்ள நிலையில் 38 காணித் துண்டுகளை வழங்குவதற்கான அனுமதி வழங்கப்பட்டிருக்கும் பத்திரங்கள் கண்டறியப்பட்டுள்ளது.முல்லைத்தீவு மாவட்டத்தின் மாந்தை கிழக்கு பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட கைவிடப்பட்டதும் வனவளத் திணைக்களத்தின் கீழ் இருந்து இதுவரை விடுவிக்கப்படாத குளங்களில் ஒன்றாக காணப்படுகின்ற நீள வெட்டிய குளம் கடந்த 2010ஆம் ஆண்டு மீள்குடியேற்றத்தின் பின்னர் முன்னுரிமை அடிப்படையில் தெரிவு செய்யப்பட்டு புனரமைக்கப்பட்டதுடன் குளத்தின் கீழான வயல் காணிகளும் துப்பரவு செய்யப்பட்டன.மேற்படி குளத்தின் கீழ் 18 ஏக்கர் காணிகள் மாத்திரமே இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளதுடன் குறித்த காணிகள் வனவளத்திணைக்களத்திடமிருந்து விடுவிக்கப்படும் பட்சத்தில் தலா ஒரு ஏக்கர் வீதம் 18 பேருக்கு மாத்திரமே வழங்க முடியும்.ஆனால் பயனாளி ஒருவருக்கு ஒரு ஏக்கர் வீதம் 38 அனுமதிப்பத்திரங்கள் வழங்கப்பட்டுள்ளன.அதேவேளை வயல் காணிகளை புனரமைப்பதற்கு இரண்டு தடவைகள் நிதி விடுவிக்கப்டுள்ளன. பிரதேச செயலகத்தினால் 42 ஏக்கர் காணிகளை துப்பரவு செய்வதற்கான நிதி ஒதுக்கப்பட்டு 26 ஏக்கர் துப்பரவு செய்வதற்கான நிதிமாத்திரமே விடுவிக்கப்பட்டுள்ளது.அதே நேரம் சேவாலங்கா நிறுவனத்தினால் 60 ஏக்கர் காணி துப்பரவு செய்வதற்குரிய நிதி விடுவிக்கப்பட்டுள்ளது.இவ்வாறு காணி குறைந்த அளவு காணி உள்ள ஒரு குளத்தில் அதிகளவு நிலப்பரப்பு காட்டப்பட்டு அதன் துப்பரவுக்கு பெருந்தொகை நிதி விடுவிக்கப்பட்டுள்ளது ஒருபுறமிருக்க 18 ஏக்கர் காணி மாத்திரமே இருக்கின்ற போது மேலதிகமாக 20 அனுமதிப்பத்திரங்களை முறையற்ற விதத்தில் வழங்கியிருப்பது தொடர்பிலும் பல்வேறு தரப்பினரும் பலரும் விசனம் தெரிவித்துள்ளனர்.