கிளிநொச்சி மாவட்டத்தில் அதிகரித்துவரும் கொவிட் தொற்று நிலைமையில் கிராம மட்டக் குழுக்கள் ஊடாக கொவிட்-19 கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
கிளிநொச்சி மாவட்டத்தில் பிரதேச செயலக ரீதியாக, கிராமசேவையாளர் மட்டத்தில் அமைக்கப்படும் கிராம மட்டக் குழுக்கள் ஊடாக கொவிட்-19 கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.கிளிநொச்சி மாவட்டத்தில் கொவிட் நிலமைகள் தொடர்பில் மாவட்டச் செயலாளர் ரூபவதி கேதீஸ்வரன் தலைமையில் மெய்நிகர் தொடர்பாடல் மூலம் நேற்று (31-08-2021) செவ்வாய்க்கிழமை நடைபெற்ற விசேட கலந்துரையாடலின்போது இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டது.கிளிநொச்சி , பிராந்திய சுகாதார சேவைகள் திணைக்கள மாவட்டப் பணிப்பாளர் மருத்துவர் சரவணபவன், மாவட்ட வைத்தியசாலைப் பணிப்பாளர் சுகந்தன், பிரதேச செயலாளர்கள் உள்ளிட்ட மாவட்டச் செயலக மற்றும் சுகாதாரத்துறை சார்ந்த முக்கியஸ்தர்களின் பங்கேற்புடன் இந்த விசேட கலந்துரையாடல் நடாத்தப்பட்டது.இதன்போது, கிளிநொச்சி மாவட்டத்தில் அதிகரித்துவரும் கொவிட் தொற்று நிலைமையில், கொவிட் விடயங்களைக் கையாள்வதற்கான ஆளணிப் பற்றாக்குறை நிலவுவது குறித்துக் கவனம் செலுத்தப்பட்டபோதே, பிரதேச மட்டக் குழுக்களின் உதவியுடன் கொவிட் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை மேற்கொள்வது என்று முடிவு எடுக்கப்பட்டது.பொதுச் சுகாதாரப் பரிசோதகர்களுக்கு காணப்படும் கடுமையான வேலைப்பளுவைக் குறைக்கும் வகையில், கிராமசேவையாளர் பிரிவு மட்டத்தில், கிராமசேவையாளர் தலைமையில் இந்தப் பிரதேச மட்டக் குழுக்கள் கொவிட் கட்டுப்பாடு, நோயாளர் தனிமைப்படுத்தல், வீட்டிலேயே நோயாளர்களைப் பராமரித்தல், உணவுப்பொதி வழங்கல் உள்ளிட்ட பல விடயங்களையும் கையாளலாம் என்று இங்கு பரிந்துரைக்கப்பட்டது.இதற்கு மேலதிகமாக, கொவிட் நோயாளர் மரணிக்கும் எண்ணிக்கை அதிகரித்துவரும் நிலையில், மாவட்ட பொது வைத்தியசாலையில் இறந்த உடலங்களைப் பேணுவதற்கான குளிரூட்டி வசதி மேலதிகமாக மேற்கொள்ளப்படவேண்டும் என்ற மரண விசாரணை அதிகாரியின் வேண்டுகோளுக்கிணங்க, குளிரூட்டி பொருத்தப்பட்ட கொள்கலன்களை இந்தத் தேவைக்காக வழங்க ஏற்பாடு செய்வது என்று மாவட்டச் செயலாளர் சம்மதம் தெரிவித்தார்.அத்துடன், கொவிட் நோயாளர் போக்குவரத்துக்கு அவசியமான மேலதிக வாகனத் தேவையை நிவர்த்தி செய்யவும், கொவிட் தொற்றுக்குள்ளான வெளிமாவட்ட சுகாதாரப் பணியாளர்களைத் தங்க வைக்க கட்டிட வசதியை ஏற்படுத்தித் தரவும் மாவட்டச் செயலாளர் இதன்போது இணக்கம் தெரிவித்தார்.கிளிநொச்சி மாவட்டத்தில் இறந்த உடலங்களை எரிப்பதற்கான மின்தகன வசதியை ஏற்படுத்துவதற்கான கோரிக்கை மாவட்ட ஒருங்கிணைப்புக்குழு இணைத்தலைவர், கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிடம், அவரது மேலதிக இணைப்பாளர் றுஷாங்கன் மூலம் விடுக்கப்பட்டுள்ளது என்று வைத்தியசாலைப் பணிப்பாளர் மருத்துவர் சுகந்தன் இந்தக் கலந்துரையாடலின்போது தெரிவித்தார்.இதற்கான தொடர் நடவடிக்கைகள் இணைத்தலைவர் மூலம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்று மேலதிக இணைப்பாளர் இங்கு குறிப்பிட்டார்.இதுதவிரவும், கொவிட் தொற்று இனங்காணப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டுள்ள குடும்பங்களுக்கான உணவுப்பொதிகளை உரிய நேரத்தில் வழங்குவதற்கான ஏற்பாடுகள் குறித்தும், இதற்கான கொடுப்பனவுகளை பலநோக்குக் கூட்டுறவுச் சங்கங்களுக்கு உரிய காலத்தில் பெற்றுக்கொடுப்பது குறித்தும் இதன்போது கலந்துரையாடப்பட்டது.