
பவினாபென் இந்தியாவின் மகள் – முதல்வர் மு.க.ஸ்டாலின்
மாற்றுத்திறனாளிகளுக்கான 16-வது பாரா ஒலிம்பிக் போட்டி ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடந்து வருகிறது. இதில் இந்தியா சார்பில் 54 வீரர், வீராங்கனைகள் 9 விளையாட்டுகளில் பங்கேற்றுள்ளனர்.
இந்த போட்டியின் ஐந்தாவது நாளான நேற்று நடந்த டேபிள் டென்னிஸ் போட்டியில் பெண்கள் ஒற்றையர் ‘சி4’ பிரிவு (காலில் பாதிப்பு அடைந்தவர்கள்) அரைஇறுதி ஆட்டம் ஒன்றில் இந்திய வீராங்கனை பவினாபென் பட்டேல், உலக தரவரிசையில் மூன்றாவது இடத்தில் உள்ள சீனாவின் ஜாங் மியாவுடன் மோதினார்.
34 நிமிடம் பரபரப்பாக அரங்கேறிய இந்த ஆட்டத்தில் வீல்சேரில் அமர்ந்தபடி கலக்கலாக ஆடிய பவினாபென் பட்டேல் 7-11, 11-7, 11-4, 9-11, 11-8 என்ற செட் கணக்கில் ஜாங் மியாவுக்கு அதிர்ச்சி அளித்து இறுதிப்போட்டிக்குள் அடியெடுத்து வைத்தார். 11 முறை தொடர்ச்சியாக ஜாங் மியாவிடம் தோல்வி கண்டு இருந்த பவினாபென் பட்டேல் அவருக்கு எதிராக முதல்முறையாக வெற்றியை ருசித்தார்.
குஜராத்தை சேர்ந்த 34 வயதான பவினாபென் பட்டேல் பாராஒலிம்பிக் டேபிள் டென்னிஸ் போட்டியில் இறுதி ஆட்டத்துக்கு முன்னேறிய முதல் இந்தியர் என்ற வரலாறு படைத்தார்.
முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தன் டுவிட்டர் பதிவில், தன்னுடைய அபாரமான ஆட்டத்தால் டோக்கியோ பாராலிம்பிக்ஸ் டேபிள் டென்னிஸ் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்றுள்ள இந்தியாவின் மகள் பவினாபென் படேலைப் பாராட்டுவதில் மகிழ்ச்சியும் பெருமையும் அடைகிறேன் என பதிவிட்டுள்ளார்.