கைவிடப்பட்ட நிலையில் காணப்படுகின்ற குளங்களில் 10 குளங்களை புனரமைத்து வழங்குமாறு விவசாயிகள் கோரிக்கை
முல்லைத்தீவு மாந்தைகிழக்கு பாண்டியன்குளம் கமநலசேவை நிலையத்தின் கீழ் கைவிடப்பட்ட நிலையில் காணப்படுகின்ற குளங்களில் 10 குளங்களை முன்னுரிமை அடிப்படையில் புனரமைத்து அதன் கீழுள்ள வயல்காணிகளை வழங்குமாறு விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
முல்லைத்தீவு மாந்தை கிழக்கு பாண்டியன்;குளம் கமநலசேவை நிலையத்தின் கீழ் உள்ள 93 வரையான குளங்களில் 44வரையான குளங்கள் மாத்திரமே விவசாய நடவடிக்கைகளுக்காக பயன்படுத்தப்பட்டு வருகின்றன.
ஏனைய குளங்கள் யுத்த சூழ்நிலையில் நீண்டகாலமாக கைவிடப்பட்ட குளங்களாக காடுகள் மண்டிக் காணப்படுகின்றன.
இவ்வாறு கைவிடப்பட்டு காடுகள் மண்டிக்காணப்படும் குளங்களில் அதிகளவான குளங்களை வனவளத்திணைக்களம் வனப்பிரதேசங்களாக கருதி கையப்படுத்தியுள்ள நிலை காணப்படுகின்றது.
இந்தநிலையில் கைவிடப்பட்டு காணப்படும் பிள்ளையார் குளம் பிரமநாதன் குளம் மணல் குளம் கூத்திமூலைக்குளம் குமுலட்டிகுளம் ஆண்டியாகுளம் பாலைக்குளம் பிள்ளையார் குளம்; பிச்சன்குளம் உள்ளிட்ட 10 வரையான குளங்களையும் புனரமைத்து அதன் கீழான வயல் நிலங்களை தமக்கு வழங்குமாறு பாலைப்பாணி சிறாட்டிகுளம் வன்னிவிளாங்குளம் மூன்றமுறிப்பு விநாயகபுரம் ஆகிய கிராமங்களில் உள்ளகாணிகள் இல்லாத விவசாயிகள் கோரியுள்ளனர்.
மேற்படி 10 குளங்களையும் புனரமைப்பதன் மூலம் 705 ஏக்கர் நிலங்களில் 215 விவசாய குடும்பங்கள் நன்மையடையக்கூடியதாக இக்கும் என மேற்படி பிரதேசங்களைச்சேர்ந்த கமக்கார அமைப்புக்கள்; தெரிவித்துள்ளன