முல்லைத்தீவு திருமுறிகண்டி பகுதியில் நீடித்த பயணத்தடை மற்றும் சுற்றுலா பயணிகளின் வருகை இன்மையால் வாழ்வாதரத்தை இழந்துள்ளதாக திருமுறிகண்டி வர்த்தகர்கள்
முல்லைத்தீவு திருமுறிகண்டி பகுதியில் நீடித்த பயணத்தடை மற்றும் சுற்றுலா பயணிகளின் வருகை இன்மை என்பவற்றால் தங்களுடைய வர்த்தக நடவடிக்கைகள் முழுமையாக பாதிக்கப்பட்டு வாழ்வாதரத்தை இழந்துள்ளதாக திருமுறிகண்டி வர்த்தகர்கள் தெரிவித்துள்ளனர்.முல்லைத்தீவு மாவட்டத்தின் ஏ9 வீதியில் அமைந்துள்ள திரு முறிகண்டி பகுதியில் சுமார் 75-க்கும் மேற்பட்டவர்த்தகர்கள் பழக்கடை வியாபாரம் கச்சான் வியாபாரம் தேனீர் கடைகள் என பல்வேறு வியாபார நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்தனர்.இந்த நிலையில் கடந்த இரண்டு மாதங்களுக்கு மேலாக நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலை மற்றும் நோய்த் தொற்று காரணமாக மாவட்டங்களுக்கான போக்குவரத்துக்கள் மற்றும் சுற்றுலா பயணிகளின் வருகை என்பன முழுமையாக முடங்கியது. இதனால் இந்தப் பிரதேசத்தில் வர்த்தக நடவடிக்கைகளில் ஈடுபட்டு வரும் 75-க்கும் மேற்பட்ட வர்த்தகர்கள் பாதிக்கப்பட்டுள்ளதுடன் வாழ்வாதாரம் இழந்த நிலையில் பெரும் கஷ்டங்களை எதிர் கொண்டு வருவதாக தெரிவித்துள்ளதுடன் குறித்த வியாபார நடவடிக்கைகளை நம்பி நுண் கடன் நிதி நிறுவனங்களிலும் தனியார் நிறுவனங்களிலும் வங்கிகளிலும் கடன்களை பெற்று அவற்றை தற்போது மீளச்செலுத்த முடியாது பெரும் கஷ்டங்களை எதிர்கொள்வதாகவும் தெரிவித்துள்ளனர்.தற்போது பயணத் தடை நீக்கப்பட்டு இருக்கும் நிலையில் கடந்த ஒரு வார காலமாக நுண் கடன் நிதி நிறுவனங்கள் தாங்கள் பெற்றுக் கொண்ட கடண்களை செலுத்துமாறு வற்புறுத்தி வருவதாகவும் தற்போது தொழில் வாய்ப்பு இல்லாத நிலையில் இந்த கடன்களை செலுத்துவதிலும் பெரும் கஷ்டங்களை எதிர்நோக்கி வருவதாக தெரிவித்துள்ளனர்.