பேரறிவாளன் உள்பட 7 பேர் விடுதலை தொடர்பாக குடியரசு தலைவர்தான் முடிவு எடுக்க வேண்டும் என உச்சநீதிமன்றத்தில் தமிழக ஆளுநர் தெரிவித்துள்ளார்.
முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்று சிறையில் உள்ள பேரறிவாளன் உள்ளிட்ட 7 தமிழர்களை விடுதலை செய்வது தொடர்பாக தமிழக அமைச்சரவையில் தீர்மானம் நிறைவேற்றி ஆளுநருக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. 2 ஆண்டுகளுக்கு மேல் ஆகியும் ஆளுநர் இந்த பரிந்துரை மீது முடிவு எடுக்கவில்லை.
இதற்கிடையே, பேரறிவாளன் தனது தண்டனையை நிறுத்தி வைத்து விடுவிக்கக்கோரி உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை நீதிபதி நாகேஸ்வர ராவ் தலைமையிலான அமர்வு விசாரித்து வருகிறது.
இந்த வழக்கு விசாரணையின்போது, பேரறிவாளனை விடுதலை செய்யும் அதிகாரம் ஜனாதிபதிக்கு மட்டுமே உள்ளது என மத்திய அரசு முதலில் வாதிட்டது. பின்னர், மத்திய அரசு தனது நிலைப்பாட்டை மாற்றியது, தமிழக ஆளுநர் 3 அல்லது 4 நாட்களில் முடிவு எடுப்பார் என மத்திய அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து பேரறிவாளன் விடுதலை தொடர்பான பரிந்துரை மீது ஆளுநர் ஒரு வாரத்திற்குள் முடிவு எடுக்க வேண்டும் என நீதிபதிகள் அவகாசம் வழங்கி, விசாரணையை ஒத்திவைத்தனர்.
ஆனால், உச்ச நீதிமன்றம் ஆணையட்டு 12 நாட்களாகியும் தமிழக அரசின் பரிந்துரை குறித்து ஆளுநர் இன்று மாலை வரை எந்த முடிவும் எடுக்கவில்லை. ஆளுநரின் முடிவு என்ன என்றே தெரியாத நிலை இருந்தது.
இந்த நிலையில் ஏழு பேரை விடுதலை தொடர்பாக குடியரசு தலைவர்தான் முடிவு எடுக்க வேண்டும் என மத்திய உள்துறை அமைச்சகம் மூலமாக உச்சநீதிமன்றத்திற்கு பிரமாண பத்திரம் மூலம் தகவல் அளித்துள்ளார்.
தமிழக அரசின் பரிந்துரையை கடந்த மாதம் 25-ந்தேதியே நிராகரித்துவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. பேரறிவாளனை முன்கூட்டியே விடுதலை செய்வது தொடர்பான அனைத்து அம்சங்களையும் ஆராய்ந்தேன் எனவும் தெரிவித்துள்ளார்