இத்தாலியில் டிக் டாக் செயலிக்கு கட்டுப்பாடுகள் - 10 வயது சிறுமி உயிரிழப்பு
இத்தாலியில் உள்ள சிசிலி தீவு பர்போலா பகுதியைச் சேர்ந்த 10 வயது சிறுமி, தனது குடும்பத்தாருடன் வசித்து வந்துள்ளார். இந்நிலையில், கடந்த புதன்கிழமை அன்று குளியறையில் மர்மமான முறையில் இறந்து கிடந்துள்ளார். அக்கா குளிக்க சென்று நீண்ட நேரமாகியும் வரவில்லை என்று, சிறுமியின் தங்கை சென்று பார்க்கையில், அவர் தரையில் விழுந்து கிடந்துள்ளார். இதனையடுத்து பெற்றோர்களுக்கு தகவல் தெரிவிக்கவே, உடனடியாக சிறுமியை மீட்டு அங்குள்ள மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். ஆனால், சிகிச்சை பலனின்றி சிறுமி பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இந்த விஷயம் தொடர்பாக காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்ட நிலையில், பத்து வயதுடைய சிறுமி டிக் டாக் செயலியில் பிளாக்அவுட் சேலஞ்ச் (Blackout Challange) என்ற விளையாட்டை விளையாடி வந்தது தெரியவந்துள்ளது.
மேலும், இந்த சவாலில் ஈடுபடுவோர் கைபேசி முன் நின்று தங்களின் கழுத்தை பெல்டால் இறுக்கி கட்டிக்கொள்ள வேண்டும். பின்னர், அந்த நபருக்கு மயக்கம் தெளியும் வரை, அந்த பெல்ட் கழுத்திலேயே இருக்க வேண்டும். இவை அனைத்தும் தங்கள் கைபேசியில் உள்ள டிக் டாக் செயலியில் வீடியோவாக பதிவு செய்ய வேண்டும் என்ற நிபந்தனை இருந்துள்ளது. இந்த ஆபத்தான சவாலை ஏற்ற சிறுமி மூச்சுத்திணறல் ஏற்பட்டு, மயக்கமடைந்து உயிரிழந்தது தெரியவந்துள்ளது. இந்த துயரத்தை தொடர்ந்து இத்தாலியில் டிக் டாக் செயலிக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதாக தகவல் தெரியவருகிறது.