
கச்சத்தீவு ஒப்பந்தங்களுக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கின் இறுதி விசாரணை செப்டம்பர் 15 ஆம் திகதி எடுத்துக்கொள்ளப்படும்
கச்சத்தீவு ஒப்பந்தங்களுக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கின் இறுதி விசாரணை எதிர்வரும் செப்டம்பர் 15 ஆம் திகதி எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.
இலங்கை - இந்தியா இடையே ஏற்படுத்திக்கொள்ளப்பட்ட கச்சத்தீவு ஒப்பந்தங்கள் தொடர்பான வழக்கு நேற்றையதினம் இந்திய உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்காக எடுத்துக்கொள்ளப்பட்டது.
கச்சத்தீவை இலங்கையிடம் ஒப்படைக்கும் வகையில் இந்தியாவுக்கும், இலங்கைக்கும் இடையே மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தங்களுக்கு எதிராகவே இந்த வழக்குத் தொடரப்பட்டது.
கச்சத்தீவை மீட்கக் கோரி அண்ணா திராவிடர் முன்னேற்றக் கழக பொதுச் செயலாளராக இருந்த மறைந்த ஜெயலலிதா, ஏ.கே. செல்வராஜ் உள்ளிட்டோர் சார்பிலும் இந்திய உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது.
இந்த வழக்கு தலைமை நீதியரசர் சஞ்சீவ் கன்னா, நீதியரசர்கள் சஞ்சய் குமார், கே.வி. விஸ்வநாதன் ஆகியோர் அடங்கிய ஆயம் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.
அப்போது, மனுதாரரான முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி தரப்பில் சிரேஷ்ட சட்டத்தரணி பி.வில்சன் முன்னிலையானார்.
"கச்சத்தீவை இலங்கைக்கு ஒப்படைக்க 1974 ஆம் ஆண்டு ஜூன் 26 மற்றும் 28 ஆகிய திகதிகளில் மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தங்களும்,1976 ஆம் ஆண்டு மார்ச் 23 ஆம் திகதி மேற்கொள்ளப்பட்ட மற்றொரு ஒப்பந்தமும் அரசியலமைப்புக்கு எதிரானது மற்றும் இந்த ஒப்பந்தங்கள் கேள்விக்குரியவை என சட்டத்தரணி நீதிமன்றில் தமது தரப்பு வாதத்தை முன்வைத்திருந்தார்.
மேலும், மனுதாரரான மறைந்த மு.கருணாநிதிக்குப் பதிலாக தி.மு.க பொருளாளர் டி.ஆர். பாலுவை வழக்கில் இணைக்க வேண்டும் என்றும் சட்டத்தரணி கோரிக்கை விடுத்தார்.
இதற்கு அனுமதி அளித்து உத்தரவிட்ட நீதியரசர்கள் ஆயம், இந்த வழக்கின் இறுதி விசாரணையை செப்டம்பர் 15 ஆம் திகதிக்கு திகதியிட்டது.
000