
2025 சாம்பியன்ஸ் தொடர் - 44 ஓட்டங்களால் நியூஸிலாந்தை வீழ்த்தியது இந்தியா
வருண் சக்ரவர்த்தியின் 5 விக்கெட் எடுப்பின் துணையுடன் 2025 ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி இறுதி குழு நிலை ஆட்டத்தில் இந்திய அணியானது நியூஸிலாந்தை 44 ஓட்டங்கள் வித்தியாசத்தில் தோற்கடித்தது.
இந்த வெற்றியுடன் குழு ஏ பிரிவில் முதலிடத்தில் உள்ள இந்தியா, அரையிறுதி ஆட்டத்தில் ஸ்டீவ் ஸ்மித் தலைமையிலான அவுஸ்திரேலிய அணியை எதிர்கொள்ளும். இந்த ஆட்டம் துபாயில் மார்ச் 04 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது.
அதேவேளை, தோல்வியைடந்த நியூஸிலாந்து அணியானது, அரையிறுதி ஆட்டத்தில் தென்னாப்பிரிக்காவை சந்திக்கும்.
இந்த ஆட்டமானது மார்ச் 05 ஆம் திகதி லாகூர் கடாபி மைதானத்தில் நடைபெறும். இரு அரையிறுதிப் போட்டிகளிலும் வெற்றி பெறும் அணிகள் மார்ச் 09 ஆம் திகதி நடைபெறும் இறுதிப் போட்டியில் ஒன்றுடன் ஒன்று பலப்பரீட்சை நடத்தும்.
துபாயில் நேற்றையதினம் நடைபெற்ற போட்டியில் 250 ஓட்டம் எடுத்தால் வெற்றி என்ற சேஸிங்கில் நியூஸிலாந்து அணிக்காக கேன் வில்லியம்சன் அதிகபடியாக 81 ஓட்டங்களை விளாசியிருந்தார்.
ரோகித் சர்மா தலைமையிலான இந்தியா அணிக்கும், மிட்செல் சான்ட்னர் தலைமையிலான நியூஸிலாந்து அணிக்கும் இடையிலான இறுதி குழு நிலைப் போட்டியானது நேற்று பிற்பகல் 02.30 மணிக்கு துபாயில் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் ஆரம்பமானது.
போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற நியூஸிலாந்து அணியானது முதலில் பந்துப் பரிமாற்றம் மேற்கொள்ளத் தீர்மானித்தது.
அதன்படி, முதலில் துடுப்பெடுத்தாடிய இந்திய அணியானது, நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் நிறைவில் ஒன்பது விக்கெட் இழப்புக்கு 249 ஓட்டங்களை பெற்றது.
இந்திய அணி சார்பில் ஸ்ரேயஸ் அய்யர் 79 ஓட்டங்களையும், ஹர்த்திக் பாண்டியா 45 ஓட்டங்களையும், அக்ஸர் படேல் 42 ஓட்டங்களையும் அதிகபடியாக பெற்றனர்.
பந்து வீச்சில் நியூஸிலாந்து சார்பில் மாட் ஹென்றி 5 விக்கெட்டுகளை அதிகபடியாக வீழ்த்தினார்.
பின்னர், 250 ஓட்டம் என்ற இலக்கினை நோக்கி பதிலுக்குத் துடுப்பெடுத்தாடிய நியூஸிலாந்து அணியானது 45.3 ஓவர்கள் நிறைவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 205 ஓட்டங்களை மாத்திரம் பெற்றது. இதனால், இந்தியா 44 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
பந்து வீச்சில் இந்திய அணி சார்பில் வருண் சக்ரவர்த்தி 5 விக்கெட்டுகளை கைப்பற்றியதுடன், போட்டியின் ஆட்டநாயகனானவும் அவர் தெரிவானார்.
000