
பிரதமர் ஹரிணி யு.எஸ்.எய்ட் நிறுவனத்தில் இருந்து நிதி பெற்றாரா? - பிரதமர் நாட்டுக்கு உண்மையை பகிரங்கப்படுத்த வேண்டும் என இந்திக அனுருத்த தெரிவிப்பு
பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய அமெரிக்காவின் யு.எஸ்.எய்ட் நிறுவனத்தில் இருந்து நிதி பெற்றதாக முன்வைக்கப்படும் குற்றச்சாட்டு குறித்து பிரதமர் நாட்டுக்கு உண்மையை பகிரங்கப்படுத்த வேண்டும் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் இந்திக அனுருத்த தெரிவித்தார்.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் காரியாலயத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
யு.எஸ்.எய்ட் நிறுவனம் இலங்கை, இந்தியா, பங்களாதேஸ், பாகிஸ்தான், இந்தோனேசியா ஆகிய நாடுகளில் அரசாங்கங்களை மாற்றுவதற்கும், தேர்தல் செயற்பாடுகளுக்கும் நிதியளித்துள்ளதாக அமெரிக்காவின் புதிய ஜனாதிபதி உத்தியோகபூர்வமாக குறிப்பிட்டுள்ளார்.
2022 ஆம் ஆண்டு போராட்டத்தின் போது இந்த நிறுவனம் நேரடியாகவும், மறைமுகமாகவும் போராட்டக்காரர்களுடன் ஒன்றிணைந்து செயற்பட்டது.
இந்த நிறுவனத்தில் இருந்து நிதி பெற்றுக் கொண்டவர்கள் மற்றும் அந்த நிதி பயன்படுத்தப்பட்ட விதம் குறித்து பாராளுமன்ற தெரிவுக்குழு ஒன்றை அமைத்து விசாரணைகளை மேற்கொள்ளுமாறு ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ஷ சபாநாயகரிடம் எழுத்துமூலமாக அறிவித்துள்ளார்.
அமெரிக்காவின் யு.எஸ்.எய்ட் நிறுவனத்திடமிருந்து பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய, பாராளுமன்ற உறுப்பினர் திலித் ஜயவீர உட்பட முன்னாள் ஜனாதிபதி, பிரதமர் ஆகியோர் நிதி பெற்றுள்ளதாக சமூக வலைத்தளங்கள் ஊடாக குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்படுகின்றன.
இந்த குற்றச்சாட்டு குறித்து நாட்டின் இரண்டாம் பிரஜையான பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய நாட்டுக்கு உண்மையை குறிப்பிட வேண்டும். பிரதமர் கடந்த காலங்களில் சமஷ்டியாட்சி அரசியலமைப்பு உருவாக்கப்பட வேண்டும் என்று குறிப்பிட்டார்.
அத்துடன் பௌத்த மதம், பாலினம் விவகாரத்தில் அவர் முற்போக்கான நிலைப்பாட்டையே கொண்டுள்ளார். ஆகவே இவ்விடயம் குறித்து பிரதமர் உறுதியான நிலைப்பாட்டை அறிவிக்க வேண்டும் என்றார்
000