
இந்துக்களின் சமர் 3 ஆவது முறையாகவும் யாழ். இந்து வசம்
இந்துக்களின் பெரும் சமர் என வர்ணிக்கப்படும் யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரிக்கும் , கொழும்பு இந்துக்கல்லூரிக்கும் எதிரான 14 ஆவது ‘இந்துக்களின் சமர்’ மாபெரும் கிரிக்கெட் போட்டியில் யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி அணி 64 ஓட்டங்களால் வெற்றியீட்டி தொடர்ச்சியாக மூன்றாவது முறையாகவும் சம்பியன் கிண்ணத்தை வென்றது.
யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி மைதானத்தில் நேற்றுமுன்தினம் (08) முடிவுற்ற இந்த இரண்டு நாள் போட்டியில் 252 ஓட்ட வெற்றி இலக்கை நோக்கி தனது இரண்டாவது இன்னிங்ஸை ஆடிய கொழும்பு இந்து அணிக்கு எஸ். சுபர்ணன் பந்துவீச்சில் அதிரடி காட்டினார். கொழும்பு இந்து அணி ஒரு கட்டத்தில் ஒரு விக்கெட் இழப்புக்கு 90 ஓட்டங்களை தாண்டி ஸ்திரமான நிலையில் இருந்தது. ஆரம்ப வீரர் சுரேஷ் குமார் மதுஷேகன் 144 பந்துகளில் 72 ஓட்டங்களை பெற்று கைகொடுத்தார். என்றாலும் அபாரமாக செயற்பட்ட சுபர்ணன் ஆரம்ப விக்கெட்டுகளை சாய்த்ததோடு மத்திய பின்வரிசையையும் ஆட்டம் காணச் செய்தார்.
குறிப்பாக மத்திய பின்வரிசையில் வேகமாக ஓட்டங்களை சேர்த்து 39 பந்துகளில் 8 பௌண்டரிகளுடன் 39 ஓட்டங்களை பெற்ற சுரேஷ் சார்விஸின் விக்கெட்டை சுபர்ணன் வீழ்த்திய பின் கொழும்பு இந்து அணியின் கடைசி எதிர்பார்ப்பு பறிபோனது.
கடைசியில் கொழும்பு இந்துக் கல்லூரி அணி 55.5 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 187 ஓட்டங்களை பெற்றது. சுபர்ணன் 21.5 ஓவர்களில் 58 ஓட்டங்களை விட்டுக்கொடுத்து 6 விக்கெட்டுகளை வீழ்த்தியதோடு முதல் இன்னிங்ஸிலும் அவர் 2 விக்கெட்டுகளை சாய்த்து ஆட்ட நாயகன் விருதை வென்றார். ஜனசக்தி குழுமத்தின் அனுசரணையில் நடைபெற்ற இந்த போட்டியில் முன்னதாக நாணய சுழற்சியில் வென்று முதலில் துடுப்பெடுத்தாடிய யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி அணி முதல் இன்னிங்ஸுக்கு 172 ஓட்டங்களை பெற்றது. தொடர்ந்து தனது முதல் இன்னிங்ஸை ஆரம்பித்த கொழும்பு இந்துக் கல்லூரி அணி 91 ஓட்டங்களுக்கே சுருண்டது.
இதனால் முதல் இன்னிங்ஸில் 81 ஓட்டங்களால் முன்னிலை பெற்ற யாழ். இந்துக் கல்லூரி அணி இரண்டாவது இன்னிங்ஸில் 9 விக்கெட் இழப்புக்கு 170 ஓட்டங்களை பெற்று எதிரணிக்கு சவாலான வெற்றி இலக்கொன்றை நிர்ணயித்தது.
இந்துக்களின் சமர் மாபெரும் கிரிக்கெட் போட்டியில் இதுவரை நடந்த போட்டிகளில் யாழ். இந்துக் கல்லூரி அணி தற்போது 4௲3 என முன்னிலை பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது. 1980 களின் ஆரம்பத்தில் அறிமுகமாகி 2009 தொடக்கம் தொடர்ச்சியாக நடைபெற்று வரும் இந்த போட்டியில் ஏழு ஆட்டங்கள் சமநிலை பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
000