சசிகலாவுக்கு கடும் நிமோனியா காய்ச்சல்- மருத்துவமனை தகவல்
கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள சசிகலாவுக்கு நிமோனியா காய்ச்சல் கடுமையாக இருப்பதாக பெங்களூரு விக்டோரியா அரசு மருத்துவமனை தெரிவித்துள்ளது. மூச்சுத்திணறலால் பெங்களூரு அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட சசிகலாவுக்கு கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டிருப்பது உறுதி ஆனது. அவருக்கு தீவிர சிகிச்சை பிரிவில் டாக்டர்கள் தொடர் சிகிச்சை அளித்து வருகிறார்கள்.
இந்நிலையில் விக்டோரியா அரசு ஆஸ்பத்திரி நிர்வாகம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
பெங்களூரில் உள்ள பவுரிங் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த சசிகலாவுக்கு 2-வது வகை சர்க்கரை நோய் இருப்பது கண்டறியப்பட்டது. ரத்த அழுத்தம், தைராய்டு போன்ற பிரச்சினைகளுடன் நீண்ட கால நுரையீரல் பாதிப்பும் உள்ளது.அவருக்கு இன்சுலின், ஹெபரின் ஸ்டெராய்டு போன்ற மருந்துகளும் வழங்கப்பட்டு இருந்தன. பவுரிங் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை பரிந்துரையின் பேரில் விக்டோரியா ஆஸ்பத்திரிக்கு நேற்று அழைத்து வரப்பட்டு இருந்தார்.அவருக்கு சி.டி. ஸ்கேன் பரிசோதனை செய்ததில் நுரையீரலில் தொற்று இருப்பதும் தெரிய வந்தது.இந்த நிலையில் நள்ளிரவில் அவருக்கு காய்ச்சல் அதிகமானதால் ரத்த பரிசோதனை செய்யப்பட்டது. இதில் கடுமையான நிமோனியா காய்ச்சல் அவருக்கு ஏற்பட்டுள்ளது தெரிய வந்தது. நுரையீரலிலும் தீவிர தொற்று உள்ளது.இதனால் கொரோனா வார்டில் தீவிர சிகிச்சை பிரிவில் வைத்து அவருக்கு சிகிச்சை மேற்கொள்ளப்படுகிறது.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.