இலங்கையின் 77 ஆவது சுதந்திரதினம் இன்று - 'தேசிய மறுமலர்ச்சிக்காக அணி திரள்வோம்" எனும் தொனிப்பொருளில் கொண்டாட்டம்
இலங்கையின் 77 ஆவது சுதந்திரதின நிகழ்வு 'தேசிய மறுமலர்ச்சிக்காக அணி திரள்வோம்" எனும் தொனிப்பொருளில் இன்றாகும்
ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தலைமையில் கொழும்பு சுதந்திர சதுக்கத்தில் இந்த நிகழ்வுகள் நடைபெறுகின்றன.
இதில் 1,873 இராணுவ சிப்பாய்கள் மாத்திரமே பங்கேற்கவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு, சுதந்திர தின நிகழ்வில் 3,384 இராணுவ சிப்பாய்கள் பங்கேற்றிருந்த நிலையில் இந்த முறை அந்த எண்ணிக்கை 1,511 ஆல் குறைக்கப்பட்டுள்ளது.
அத்துடன், இம்முறை சுதந்திர தின கொண்டாட்டங்களுக்கு முப்படைகளின் கவச வாகனங்கள் பயன்படுத்தப்பட மாட்டாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனினும், கடற்படையினால் வழமையாக நடத்தப்படும் 25 துப்பாக்கி வேட்டுகள் தீர்க்கும் நிகழ்வு இன்று இடம்பெறவுள்ளது.
கடந்த ஆண்டு சுதந்திரதின விழாவிற்கு 19 விமானப்படை விமானங்கள் பயன்படுத்தப்பட்டிருந்த போதிலும், இந்த ஆண்டு சுதந்திர தின விழாவிற்கு மூன்று விமானங்களை மாத்திரம் பயன்படுத்துவதற்குத் திட்டமிடப்பட்டுள்ளது.
இதேவேளை, சுதந்திர தினத்தை முன்னிட்டு சுதந்திர சதுக்கத்தைச் சூழவுள்ள பகுதிகளில் விசேட பாதுகாப்பு திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளதாக காவல்துறை ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட காவல்துறை அத்தியட்சகர் புத்திக மனதுங்க தெரிவித்துள்ளார்.
இதேவேளை, 77 ஆவது சுதந்திர தின கொண்டாட்டத்தை முன்னிட்டு, அனைத்து அரச நிறுவனங்கள் தொடர்பாகவும் கடந்த மாதம் 10 ஆம் திகதி பொது நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சினால் வெளியிடப்பட்ட சுற்றறிக்கை திருத்தம் செய்யப்பட்டுள்ளது.
இந்த மாதம் முதலாம் திகதி முதல் 7 ஆம் திகதி வரை அனைத்து அரச நிறுவனங்களிலும் தேசியக் கொடியைப் பறக்கவிடுமாறு அந்த சுற்றறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
நேற்றும் இன்றும் அனைத்து அரச நிறுவனங்களையும் மின் விளக்குகளால் அலங்கரிக்க நடவடிக்கை எடுக்குமாறும் அறிவிக்கப்பட்டது.
எனினும் பொது நிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு அரச நிறுவனங்களின் மின் விளக்குகளால் அலங்கரிக்கும் செயற்பாட்டை இரத்து செய்ய தீர்மானித்துள்ளதாக நேற்று அறிவித்தது.
மின்சார பாதுகாப்பு மற்றும் மின் அலங்காரத்திற்கான செலவைக் கருத்திற் கொண்டு இந்த தீர்மானம் எட்டப்பட்டதாக அந்த அமைச்சு தெரிவித்துள்ளது.
000