அபிவிருத்திக்காக ஒதுக்கப்படும் நிதியை வடக்கு மாகாணம் உரிய வகையில் செலவு செய்வதில்லை - மத்திக்கு ஏன் திருப்பி அனுப்புகின்றீர்கள் - அதிகாரிகளிடம் கேள்வி எழுப்பிய ஜனாதிபதி அநுர
வடக்கு மாகாண அபிவிருத்திக்காக மத்திய அரசால் நிதி ஒதுக்கப்படும்போது உரிய வகையில் செலவு செய்யாமல் மீண்டும் மத்திக்கு ஏன் அனுப்புகின்றீர்கள் என ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க வடக்கின் அதிகாரிகளிடம் கேள்வி எழுப்பியுள்ளார்.
யாழ். மாவட்ட செயலகத்தில் நேற்று (31) நடைபெற்ற மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுக் கலந்துரையாடலின்போது வீதி அபிவிருத்தி அதிகார சபை விடயதானங்கள் தொடர்பில் நிதி வேண்டும் எனக் கோரிக்கை முன்வைத்த நிலையிலே ஜனாதிபதி இவ்வாறு கேள்வியை முன்வைத்திருந்தார்.
மேலும் மத்திய அரசால் வடக்கு மாகாண அபிவிருத்திக்காகப் பல்வேறு நிதி மூலங்கள் ஊடாக நிதி ஒதுக்கப்படுகின்றது. ஆனால், ஒதுக்கப்படும் நிதிகள் பலவும் செலவு செய்யப்படாமல் திருப்பி அனுப்பப்படும் நிலை காணப்படுகின்றது.
இந்த மாகாணத்தில் பல்வேறு அபிவிருத்தி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டியுள்ளன. இருந்தபோதிலும் அதிக நிதிகள் திருப்பி அனுப்பப்படுகின்ற நிலையில் வடக்கு மாகாணத்தில் உள்ளக வீதிகளைப் புனரமைப்பதற்கு எவ்வளவு நிதி வேண்டும் என்று ஜனாதிபதி இதன்போது கேள்வி எழுப்பினார்.
இதன்போது துறைசார் அதிகாரி விவரங்கள் தெரியாது தடுமாறிய நிலையில், ஜனாதிபதி மீண்டும், "வீதிகளைப் புனரமைப்பதற்கு எவ்வளவு நிதி வேண்டும் எனச் சரியாகக் கூறுங்கள், ஏறக்குறைய என்று கதை கூற வேண்டாம் என கோரியிருந்தார்
மேலும் நாடு பொருளாதார நெருக்கடி நிலையில் இருந்து இன்னும் மீளவில்லை. இங்கு பெற்றோல் இருக்கின்றது, எரிவாயு இருக்கின்றது என்றால் பொருளாதார நெருக்கடி இல்லை என நினைக்க வேண்டாம்.
நாங்கள் இன்னும் பொருளாதார நெருக்கடியில் இருந்து கொண்டே இம்முறை வரவு - செலவுத் திட்டத்தில் அபிவிருத்திப் பணிகளை மேற்கொள்ளவுள்ளோம்.
ஆகவே, அபிவிருத்திக்கு நிதி ஒதுக்கீடு செய்தால் அதனை உரிய முறையில் பயன்படுத்துவது அதிகாரிகளின் பொறுப்பாகும் என்று வலியுறுத்தியிருந்தார்.
இதேபோன்று ஐனாதிபதி பல்வேறு விடயங்கள் தொடர்பிலும் தகவல்களைக் கேட்ட போதும் துறை சார்ந்த ரீதியில் உரிய தகவல்கள் தெரியாமல் அதிகாரிகள் தடுமாறியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
000