இலங்கை கடற்படை உதவி - பாரிய போதைப்பொருள் கடத்தலை முறியடித்த மாலைத்தீவு கடலோர காவல்படையினர்
இலங்கை கடற்படையினரின் உதவியுடன் மாலைத்தீவு கடலோர காவல்படையினர் கிரிஸ்டல் மெத்தம்பேட்டமைன் மற்றும் கொக்கெய்ன் போதைப்பொருட்களை ஏற்றிச் சென்ற இலங்கை மீன்பிடி இழுவை படகொன்றை கைப்பற்றியுள்ளனர்.
இந்த சம்பவத்தில் மாலைத்தீவு கடலோரக் காவல்படையினரால் சுமார் 344 கிலோ கிராம் கிரிஸ்டல் மெத்தம்பேட்டமைன் மற்றும் சுமார் 124 கிலோ கொக்கெய்ன் போதைப்பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. சம்பவம் தொடர்பில் 05 சந்தேக நபர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இலங்கை கடற்படை வழங்கிய உளவுத்துறை தகவலின் அடிப்படையில், மாலைத்தீவு கடலோர காவல்படை நவம்பர் 23 அன்று நாட்டின் பிரத்தியேக பொருளாதார வலயத்திற்குள் நுழைந்த பல நாள் இழுவை படகை குறிவைத்து சிறப்பு தேடுதல் நடவடிக்கையை மேற்கொண்டது.
இந்த நடவடிக்கையின் போதே இந்த போதைப்பொருட்கள் தொகை மீட்கப்பட்டுள்ளன.
கடற்படை புலனாய்வுப் பிரிவினரும் மாலைத்தீவு புலனாய்வுப் பிரிவினரும் இணைந்து இந்த போதைப்பொருள் இலங்கைக்கு அனுப்பப்பட்டதா அல்லது பிராந்தியத்தில் உள்ள வேறு நாட்டிற்கு அனுப்பப்பட்டதா என விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
00