1,700 ரூபா சம்பளம் வழங்கப்படும் என நாடகமாடியவர்கள் வீட்டுக்கும் சென்றுவிட்டார்கள் - ஜனாதிபதி
பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு நியாயமான சம்பள உயர்வை பெற்றுக்கொடுப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க உறுதியளித்துள்ளார்.நுவரெலியாவில் ஞாயிற்றுக்கிழமை (03) நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இந்த உறுதிமொழியை வழங்கினார்.
' ஜனாதிபதி தேர்தலின்போது தோட்டத் தொழிலாளர்களை ஏமாற்றினார்கள். மே தினக் கூட்டத்துக்கு கொட்டகலைக்கு வந்து தோட்டத் தொழிலாளர்களுக்கு 1,700 ரூபா சம்பளம் வழங்கப்படும் என முன்னாள் ஜனாதிபதி கூறினார். ஆனால் இன்னமும் அந்த சம்பள உயர்வு வழங்கப்படவில்லை. அவர் வீட்டுக்கும் சென்றுவிட்டார்.
தோட்டத் தொழிலாளர்களுக்கு நியாயமான சம்பள உயர்வை பெற்றுக்கொடுப்பதற்கு நாம் நிச்சயம் நடவடிக்கை எடுப்போம். அதேபோல அடுத்த வரவு - செலவுத் திட்டத்தில் அரசாங்க ஊழியர்களுக்கும் சம்பள உயர்வு வழங்கப்படும்.
மக்கள் எந்நாளும் அரசாங்க நிவாரணங்களை நம்பி வாழமுடியாது. மக்கள் சுயமாக எழுந்து நிற்ககூடிய வகையில் பொருளாதார சூழ்நிலையை நாம் உருவாக்குவோம்.
ஜனாதிபதி தேர்தலின்போது நுவரெலியா மாவட்ட மக்களை தேடி அடிக்கடி வந்தவர்கள், தற்போது கொழும்பிலேயே முடங்கியுள்ளனர். அதுதான் அவர்களின் அரசியல். ஆனால் நாம் என்றும் மக்களுக்காக களத்தில் நிற்போம். மக்களுக்கான அரசியலை முன்னெடுப்போம்
அத்துடன், 2025 வரவு - செலவுத் திட்டத்தில் அரசாங்க ஊழியர்களின் சம்பளம் அதிகரிக்கப்படும் எனவும் அவர் கூறினார். நுவரெலியாவில் இனி அரசியல் சண்டி தனங்களுக்கு இடமில்லை. மக்களை அடக்கி ஆளும் நிலையும் முடிவுக்கு கொண்டுவரப்பட்டுள்ளது எனவும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.
' ஜனாதிபதி தேர்தலின்போது நுவரெலியா மாவட்டத்தில் தமிழ் மக்களின் வாக்குகளை குறிவைத்து கட்சிகளின் தலைவர்கள் அடிக்கடி நுவரெலியா வந்தார்கள். தற்போது வருகின்றார்களா? இல்லை. ஏனெனில் அவர்கள் கொழும்பில் போட்டியிடுகின்றனர். கொழும்புக்கு வெளியில் வரமாட்டார்கள். ஆனால் நாம் அப்படியானவர்கள் அல்லர். வென்றாலும், தோற்றாலும் நாம் மக்களுக்காக நிச்சயம் வருவோம். அரசியலுக்காக நாம் மக்களை பிரித்தாள மாட்டோம்.
இந்நாட்டை ஆண்டவர்கள் நாட்டை நாசமாக்கியுள்ளனர். நுவரெலியாவில் வறுமை நிலை நிலவுகின்றது. சுகாதாரம், கல்வி உள்ளிட்ட விடயங்களில் பின்தங்கிய நிலை காணப்படுகின்றது. பெருந்தோட்ட மக்களுக்கு தமக்கென நிலம் இல்லை. நிம்மதியான வாழ்வு இல்லை. ஆனால் ஆட்சியாளர்கள் சொகுசாக வாழ்ந்துவந்தனர்.
எனினும், கடந்த ஜனாதிபதி தேர்தலின்போது மக்கள் இணைந்து மக்களுக்கான அரசாங்கத்தை உருவாக்கியுள்ளனர். எனவே, மக்களுக்குரிய சேவைகள் நாம் உரிய வகையில் முன்னெடுப்போம்.
நுவரெலியாவில் சுற்றுலாத்துறையை மேம்படுத்த முடியும். அதற்குரிய திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளன. வரவு - செலவுத் திட்டம் ஊடாக அரசாங்க ஊழியர்களின் சம்பளம் நிச்சயம் அதிகரிக்கப்படும்.
ஜனாதிபதி, முன்னாள் ஜனாதிபதி, அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் என அரசியல்வாதிகளின் வீண் செலவுகள் குறைக்கப்பட்டு, மக்கள் பணம் சேமிக்கப்படும். இது கொள்கை ரீதியிலான முடிவு. முன்னாள் ஜனாதிபதிகளை பழிவாங்கும் நடவடிக்கை அல்ல."- என்றார்.