ஆசியான் உச்சி மாநாடு - சீனாவுக்கு கடும் எதிர்ப்பு
தென்கிழக்கு ஆசிய நாடுகளின் கூட்டமைப்பான 'ஆசியான்' அமைப்பில் புருனே, கம்போடியா, இந்தோனேஷியா, லாவோஸ், மலேஷியா, மியான்மர், பிலிப்பைன்ஸ், சிங்கப்பூர், தாய்லாந்து, வியட்நாம் ஆகிய 10 நாடுகள் அங்கம் வகிக்கின்றன.
இந்த கூட்டமைப்புக்கு நடப்பாண்டில் லாவோஸ் நாடு தலைமை வகிக்கிறது. இந்நிலையில், ஆசியான் - இந்தியா இடையிலான 21ஆவது உச்சி மாநாடு மற்றும் 19ஆவது கிழக்கு ஆசிய உச்சி மாநாடு ஆகியவை லாவோசின் வியன்டியன் நகரில் நேற்றுமுன்தினம் வியாழக்கிழமை ஆரம்பமாகியது.
மாநாட்டில், தென்சீன கடற்பகுதியில் சமீபத்தில் பிலிப்பைன்ஸ் - சீன கப்பல்களுக்கு இடையே நடந்த மோதல்கள் குறித்து விவாதிக்கப்பட்டது.
கடல் சார்ந்த சண்டையின் போது, ஐக்கிய நாட்டு சட்டத்தை நிலைநாட்டுவது அவசியம் என வலியுறுத்தப்பட்டது. இதை அடிப்படையாக கொண்டு கடல் சார்ந்த பிரச்சினைகளுக்கு தீர்வு காணுமாறு சீனாவுக்கு ஆசியான் தலைவர்கள் அழுத்தம் கொடுத்தனர். இதற்கு பதிலளித்துள்ள சீனா, பிராந்திய விவகாரங்களில் வெளிநாட்டு தலைவர்கள் தலையிட வேண்டாம் என வலியுறுத்தியுள்ளது.
இது குறித்து சீன பிரதமர் லீ கியாங் கூறியுள்ளதாவது, ''நம் வளர்ச்சிக்கு சில நிலையற்ற காரணிகள் தடையாக உள்ளன. குறிப்பாக வெளிப்புற சக்திகள் நம் விவகாரங்களில் அடிக்கடி தலையிடுகின்றன. 'ஆசியாவில் பூகோள மோதல்கள் மற்றும் புவிசார் அரசியல் மோதல்களை அறிமுகப்படுத்த அந்த சக்திகள் முயற்சிக்கின்றன. அதை தடுக்க வேண்டும். சர்ச்சைகள் சுமூகமாகத் தீர்க்கப்படுவதை உறுதிசெய்ய நாடுகளுக்கு இடையே மேலும் பேச்சு நடத்தப்பட வேண்டும்.'' என்றார்
00