வேட்பாளர்களின் விருப்பு எண்கள் அடுத்த வாரத் தொடக்கத்தில் வெளியிடப்படும் - தேர்தல்கள் ஆணைக்குழுவின் அறிவிப்பு
ஏற்றுக் கொள்ளப்பட்ட வேட்பு மனுக்களுக்கு அமைய வேட்பாளர்களின் விருப்பு எண்கள் அடுத்த வாரத் தொடக்கத்தில் வெளியிடப்படும் எனத் தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
அதற்கான நடவடிக்கைகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருவதாகத் தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
இதேவேளை, எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலுக்கான வேட்புமனுக்கள் ஏற்கும் பணி நேற்று நண்பகல் 12 மணியுடன் நிறைவடைந்தது.
இதன்படி, அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகள் மற்றும் சுயேட்சை குழுக்களிடம் இருந்து 690 வேட்பு மனுக்கள் கிடைக்கப் பெற்றுள்ளதாகத் தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
மொத்த 764 வேட்பு மனுக்கள் கிடைக்கப் பெற்றதுடன் அவற்றில் 74 வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன.
தங்களது வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டமையை நீதிமன்றத்தின் ஊடாக சவாலுக்கு உட்படுத்துவதற்குச் சகல வேட்பாளர்களுக்கும் சந்தர்ப்பம் உள்ளது.
சுயேட்சை குழுக்களுக்கான சின்னங்களும் விருப்பு எண்ணும் அந்தந்த மாவட்ட தேர்தல் தெரிவத்தாட்சி அதிகாரியின் ஊடாக வழங்கப்படும்.
அதிகளவான அரசியல் கட்சிகளும் சுயேட்சை குழுக்களும் திகாமடுல்ல தேர்தல் மாவட்டத்தில் போட்டியிடுகின்றன.
குறித்த மாவட்டத்தில் போட்டியிடுவதற்காக 64 தரப்பினர்கள் வேட்பு மனுக்களைத் தாக்கல் செய்துள்ளனர்.
குறைந்தளவான கட்சிகளும் சுயேட்சை குழுக்களும் பொலன்னறுவை மற்றும் மொனராகலை மாவட்டங்களில் போட்டியிடுவதாகத் தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
00