சட்டவிரோத மணலைக் கொண்டு சென்ற குற்றத்துக்காக அடையாளப்படுத்தப்படும் வாகனங்களைக் கறுப்புப் பட்டியலில் – வடக்கின் ஆளுநர்
வடக்கு மாகாணத்தில் சட்டவிரோத மணலைக் கொண்டு சென்ற குற்றத்துக்காக அடையாளப்படுத்தப்படும் வாகனங்களைக் கறுப்புப் பட்டியலில் வைத்து அவர்களுக்கு எதிர்காலத்தில் மணல் விநியோக அனுமதிகளை வழங்காமல் இருப்பதற்கு வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தலைமையில் இடம்பெற்ற கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
சட்டவிரோத மணல் அகழ்வு உட்பட பல்வேறு விடயங்கள் தொடர்பில் நேற்று செவ்வாய்க்கிழமை நடைபெற்ற கலந்துரையாடலில் ஆராயப்பட்டது.
கூட்டத்தில் கலந்துகொண்ட பொலிஸார் இரண்டு விடயங்களை முன்வைத்தனர்.
திருகோணமலையிலிருந்து யாழ்ப்பாணத்துக்கு மணல் கொண்டு வருவதாக அனுமதிப்பத்திரத்தைப் பெற்றுவிட்டு, கிளிநொச்சி அல்லது முல்லைத்தீவில் உள்ளூரிலிருந்து மணலை ஏற்றிவிட்டு அனுமதிப் பத்திரத்துக்கு அமைவான வீதியால் பயணிக்கும்போது தம்மால் ஒன்றும் செய்ய முடியாமல் இருப்பதாகப் பொலிஸார் குறிப்பிட்டனர்.
அதைவிட, அனுமதிப்பத்திரம் பெறப்பட்ட ஒரு நாளில் அந்த அனுமதிப்பத்திரத்தை வைத்து பல தடவைகள் மணலை ஏற்றிப் பறிக்கின்றனர். இதன் காரணமாகவே மணலுடன் செல்லும் வாகனங்கள் வேகமாகச் செல்கின்றன என்பதையும் பொலிஸார் குறிப்பிட்டனர். இதற்கு மேலதிகமாக, போலியான அனுமதிப்பத்திரங்களையும் தயாரிப்பதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.
இதற்குத் தீர்வாக, மணல் அனுமதிப் பத்திரத்தில் 'க்யூஆர்' முறைமையைக் கொண்டு வந்து பொலிஸார் பரிசோதிப்பதற்கு ஏதுவாக அதனைச் செயற்படுத்தும் முறைமை பரிந்துரைக்கப்பட்டது.
மேலும், நீதிமன்றங்களால் சட்டவிரோத மணல் அகழ்வுக்கு பயன்படுத்தப்பட்டதாக அடையாளப்படுத்தப்படும் வாகனங்களை கறுப்புப் பட்டியலில் சேர்ப்பது என்றும், அந்த வாகனங்களுக்கு ஒருபோதும் மணல் விநியோக அனுமதிப்பத்திரம் வழங்குவதில்லை என்றும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
மேலும் வடக்கு மாகாணத்தில் ஒரு மாவட்டத்திலிருந்து மற்றைய மாவட்டத்துக்கு மணல் கொண்டு செல்லப்படுவதானால் எதிர்காலத்தில் இரண்டு மாவட்ட செயலர்களுக்கும் அது தெரியப்படுத்த வேண்டும் என்றும், அவை என்ன நோக்கத்துக்கு கொண்டு செல்லப்படுகின்றன என்பதும் அறிவிக்கப்படவேண்டும் என்றும் ஆளுநர் தெரிவித்துள்ளார்
000