காசாவைப் போன்று லெபனானும் அழிவைச் சந்திக்கும் - இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு எச்சரிக்கை
காசாவைப் போன்று லெபனானும் அழிவைச் சந்திக்குமென இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இதேநேரம் லெபனான் நீண்ட போரை எதிர்கொள்வதற்கு முன்னதாக அதனைக் காப்பாற்றுவதற்கு ஒரு சந்தர்ப்பம் உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
காணொளி ஊடாக லெபனான் மக்களிடம் உரையாற்றிய போதே இஸ்ரேலிய பிரதமர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அத்துடன், ஹெஸ்புல்லாவை புறந்தள்ளி, காசாவில் நாம் பார்ப்பது போன்ற அழிவு மற்றும் சிரமங்கள் லெபனானில் ஏற்படுவதனை தவிர்ப்பதற்கு வலியுறுத்துமாறும் அந்த நாட்டு மக்களிடம் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
ஹெஸ்புல்லாவிடம் இருந்து நாட்டை விடுவிப்பதன் மூலம் இந்தப் போர் முடிவுக்குக் கொண்டுவரப்படும் எனவும் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்துள்ளார்.
ஹெஸ்புல்லாவுக்கு எதிராக இஸ்ரேல் தமது தரைவழித் தாக்குதல் படையினை விரிவுபடுத்தியுள்ளது. இஸ்ரேல் ஆயிரக்கணக்கான படையினரைத் தென்மேற்கு லெபனானில் நிலைநிறுத்தியுள்ளது.
இதனிடையே, ஹெஸ்புல்லா தரப்பினர் தொடர்ந்தும் மூன்றாவது நாளாக இஸ்ரேலின் துறைமுக நகரமான ஹைஃபா மீது தாக்குதல்களை நடத்திவருகின்றனர். இந்த தாக்குதலில் சுமார் 12 பேர் காயமடைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
000