ஏப்ரல் 21 தாக்குதல் குறித்த விசாரணைகள் மீண்டும் ஆரம்பம்
ஏப்ரல் 21 தாக்குதல் குறித்த விசாரணைகள் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் தாக்குதல்களுடன் தொடர்புடையவர்கள் நிச்சயமாகத் தண்டிக்கப்படுவார்கள் எனவும் அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.
அமைச்சரவைத் தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த அரசாங்கங்களைப் போன்று இந்த விவகாரம் குறித்த விசாரணைகளை இல்லாமல் செய்வதற்கோ மூடிமறைப்பதற்கோ எந்தவொரு சந்தர்ப்பத்திலும் தற்போதைய அரசாங்கம் நடவடிக்கை எடுக்காது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் கூறுகையில் ஏப்ரல் 21 தாக்குதல்கள் தொடர்பில் புதிய விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
ஏற்கனவே விசாரணைகளை முன்னெடுத்த ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் அறிக்கையிலுள்ள பக்கங்கள் எவ்வாறு நீக்கப்பட்டன என்பது குறித்தும் ஆராயப்படவுள்ளது.
இந்த விவகாரத்தில் நாட்டு மக்களுக்கு எந்தவித அநீதியும் இடம்பெறுவதற்கு வாய்ப்பளிக்கப்பட மாட்டாது.
புதிய விசாரணைகளினூடாக, ஜனாதிபதிக்கு வழங்கப்பட்ட அறிக்கையிலுள்ள பக்கங்கள் நீக்கப்பட்டனவா? என்பது வெளிக் கொண்டுவரப்படும்.
இரண்டாவதாக முன்னெடுக்கப்பட்ட விசாரணை அறிக்கை யாரிடமுள்ளது என்பது தனிப்பட்ட ரீதியில் எனக்குத் தெரியாது.
தற்போதைய அரசாங்கத்தின் மீது ஏப்ரல் 21 தாக்குதல்கள் தொடர்பில் குற்றச்சாட்டுக்களை முன்வைக்க வாய்ப்பில்லை.
அரச புலனாய்வு சேவையின் பணிப்பாளராகப் பதவி வகித்த மேஜர் ஜெனரல் சுரேஸ் சலே ஓய்வு பெற்றதையடுத்து, அந்த பதவிக்குப் பிரதி காவல்துறைமா அதிபர் தம்மிக குமார நியமிக்கப்பட்டுள்ளார்.
பதவியில் மாற்றம் ஏற்பட்டாலும், விசாரணைகளுடன் தொடர்புடைய ஆவணங்கள் அவ்வாறே இருக்க வேண்டும்.
எனவே விசாரணைகள் தொடர்பில் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கைகள் காணாமல் போயிருந்தாலும், அதற்குப் பதிலளிப்பதற்கு அவர் பொறுப்புடையவராவார்.
அரசாங்கம் இன்னும் முழுமையாக நியமிக்கப்படவில்லை. ஜனாதிபதி மாத்திரமே தெரிவு செய்யப்பட்டிருக்கின்றார்.
எவ்வாறாயினும், அவர் பதவியேற்றுக் குறுகிய காலத்துக்குள் ஆரம்பக்கட்ட நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.
000