மக்களின் நன்மையளிக்கவே விலைத் திருத்தங்கள் - பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் மொத்த விற்பனை முனைய நிறுவனத்தின் தலைவர்
நாட்டில் அடுத்த வருடம் ஏப்ரல் வரை எரிபொருளைக் கொள்வனவு செய்வதற்கான ஏற்பாடுகள் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாக,இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் மற்றும் பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் மொத்த விற்பனை முனைய நிறுவனத்தின் தலைவர் டி. ஜே. ராஜகருணா தெரிவித்தார்.
விலை குறைக்கப்பட்ட எரிபொருள் கடந்த மாதம் அரசாங்கத்தினால் இறக்குமதி செய்யப்பட்டதாகும் என்றும் அவர் கூறினார். இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபன தலைமையகத்தில் நேற்று (01) இடம்பெற்ற விசேட செய்தியாளர் மாநாட்டிலேயே இதனைத் தெரிவித்தார்.
இதுபற்றித் மேலும் தெரிவித்த அவர்:
எரிபொருட்களில் விலை திருத்தம் செய்யப்பட்டுள்ளது.தேசிய மக்கள் சக்தியின் வேட்பாளராக இல்லாமல் ஜனாதிபதியாகவே அவர் இதனைச் செய்துள்ளார். நாடு தொடர்பில் கவனம் செலுத்தியே எரிபொருளில் விலைக்குறைப்புக்கள் செய்யப்பட்டுள்ளன.
கடந்த அரசாங்கங்க காலப்பகுதியில் இடம்பெற்ற மோசடிகள் மற்றும் ஊழல்களை கண்டறிய ஜனாதிபதி ஆணைக்குழுவொன்று நியமிக்கப்படவுள்ளது. இந்த ஆணைக்குழு பெற்றோலிய கூட்டுத்தாபனத்தில் இடம்பெற்ற மோசடிகள் மற்றும் ஊழல்கள் தொடர்பிலும் நடவடிக்கை எடுக்கும். ஊழல் மோசடிகளில் ஈடுபட்ட அதிகாரிகள் தப்பிக்க முடியாது.
செல்வம் நிறைந்த நாடும் அழகிய வாழ்வும்’ என்ற தேசிய மக்கள் சக்தி வேலைத்திட்டத்தின் படி புதிய அரசாங்கம் செயற்படும். மின்சார கட்டணத்தை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு ஒழுங்குபடுத்தியுள்ளது. பெற்றோலியத்தை ஒழுங்குபடுத்தும் பணிகளும் மேற்கொள்ளப்படும். வரியைக் குறைத்து எரிபொருள் விலையை தீர்மானிக்க வேண்டுமா னால், நாடு குறித்து கவனம் செலுத்தி அதனை மேற்கொள்வதற்கு கால அவகாசம் தேவைப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
000