சிறப்புரிமைகளை மீளாய்வு செய்வதற்கு விசேட குழு 02 - மாதங்களுள் அறிக்கை சமர்ப்பிக்கவும் பணிப்பு
அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் முன்னாள் ஜனாதிபதிகளின் உரித்துக்கள், கொடுப்பனவுகள் மற்றும் சிறப்புரிமைகளை மீளாய்வு செய்வதற்கு விசேட குழுவை நியமிப்பதற்கு அமைச்சரவை தீர்மானித்துள்ளதாக, அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்தார்.
இது தொடர்பில் தற்போது நடைமுறையில் உள்ள கட்டளைச் சட்டங்களை ஆராய்ந்து, பரிந்துரைகளுடன் இரண்டு மாதங்களுக்குள் அறிக்கை சமர்ப்பிப்பதற்காக இந்த மூவரடங்கிய குழு நியமிக்கப்பட்டுள்ளது.
நீதி,பொதுநிர்வாக உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள், உள்ளுராட்சி மற்றும் தொழில அமைச்சரான பிரதமர் ஹரிணி அமரசூரிய சமர்ப்பித்துள்ள யோசனைக்கே, அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளதாக அவர் தெரிவித்தார்.
அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பு, நேற்று தகவல் திணைக்களத்தில் நடைபெற்றது.இங்கு விளக்கமளித்த போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.
இது தொடர்பில் மேலும் தெரிவித்த அவர்,
நாட்டு மக்களின் வாக்குகளால் நியமிக்கப்படும் பாராளுமன்ற உறுப்பினர்கள், அமைச்சர்கள், மற்றும் முன்னாள் ஜனாதிபதிகளுக்கு சம்பளம், கொடுப்பனவு, ஓய்வூதியம், உத்தியோகபூர்வ இல்லம், வாகனங்கள், பணியாட்குழாம், அலுவலக உபகரணங்கள் மற்றும் பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் போன்ற பல்வேறு உரித்துக்கள், கொடுப்பனவுகள் மற்றும் சிறப்புரிமைகள் வழங்கப்பட்டு வருகின்றன.
குறித்த உரித்துக்கள், கொடுப்பனவுகள் மற்றும் சிறப்புரிமைகளை வழங்குவதற்காக மக்களுடைய வரிப்பணத்திலிருந்து அரசாங்கம் குறிப்பிடத்தக்க நிதியை வருடாந்தம் செலவிட நேர்ந்துள்ளது.
அதிகளவான செலவுகளைக் குறைக்க வேண்டிய தேவையை அரசாங்கம் கண்டறிந்துள்ளது.இது தொடர்பான விடயங்களை ஆராய்ந்து திறைசேரிக்கு தேவையற்ற சுமைகளை ஏற்படுத்தும் மற்றும் முறையற்ற உரித்துக்கள், கொடுப்பனவுகள், சிறப்புரிமைகளை முறையான ரீதியில் மட்டுப்படுத்துவதற்கு அல்லது மாற்று முறைகளை அறிமுகப்படுத்துவதற்குப் பொயருத்தமான பரிந்துரைகளை இந்த குழு முன்வைக்கவுள்ளது
00