9 ஆவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியைத் தெரிவு செய்வதற்கான தேர்தல் நாளை
9 ஆவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியைத் தெரிவு செய்வதற்கான தேர்தல் நாளை இடம்பெறவுள்ளது.
இந்த தேர்தலுக்காக ஒரு கோடியே 71 இலட்சத்து 41,354 பேர் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளனர்.
அதற்காக நாடளாவிய ரீதியாக 13,421 வாக்களிப்பு நிலையங்கள் ஸ்தாபிக்கப்பட்டுள்ளன. வாக்கெண்ணும் பணிகளுக்காக 1,713 நிலையங்கள் ஸ்தாபிக்கப்பட்டுள்ளன.
இதேவேளை, நாடளாவிய ரீதியாக ஸ்தாபிக்கப்பட்டுள்ள வாக்களிப்பு நிலையங்களுக்கு அண்மித்த பகுதிகளில் விசேட பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதற்காக 63,000க்கும் மேற்பட்ட காவல்துறை உத்தியோகத்தர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
3,000க்கும் அதிகமான இராணுவ சிப்பாய்களும், 2,500க்கும் அதிகமான காவல்துறை விசேட அதிரடிப்படையினரும் பாதுகாப்பு கடமைகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
இதேவேளை, ஜனாதிபதித் தேர்தலுக்கான வாக்கு பெட்டிகளையும், அதிகாரிகளையும் வாக்களிப்பு நிலையங்களுக்கு அனுப்பும் நடவடிக்கை இன்று காலைமுதல் இடம்பெறும் என மேலதிக தேர்தல்கள் ஆணையாளர் சிவசுப்ரமணியம் அச்சுதன் தெரிவித்தார்
இதேநேரம் நாடளாவிய ரீதியில் அமைக்கப்பட்டுள்ள ஜனாதிபதி வேட்பாளர்களின் 13 ஆயிரத்து 314 தேர்தல் செயற்பாட்டுக் காரியாலயங்கள் நேற்று நள்ளிரவுடன் அகற்றப்பட வேண்டும் எனத் தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.
அதன்படி, கடந்த நள்ளிரவுமுதல் தேர்தல் தொகுதிக்கு ஒரு காரியாலயம் என்ற அடிப்படையிலும், வேட்பாளர்களின் இல்லத்திலும் தேர்தல் செயற்பாட்டுக் காரியாலயத்தை நடத்திச் செல்ல முடியும் என அந்த ஆணைக்குழு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை வாக்கெடுப்பு நிலையத்திலிருந்து 500 மீற்றருக்கு உட்பட்ட பகுதியில் காணப்படும் தேர்தல் செயற்பாட்டுக் காரியாலயங்களும் அகற்றப்பட வேண்டும் எனத் தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
000