ஜனாதிபதித் தேர்தலுக்கான அஞ்சல் மூல வாக்களிப்பு இன்றுடன் நிறைவு - தேர்தல்கள் ஆணைக்குழு
நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலுக்கான அஞ்சல் மூல வாக்களிப்பு இன்றுடன் (12) நிறைவடையும் எனத் தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.
செப்டம்பர் 4, 5 மற்றும் 6 ஆம் திகதிகளில் வாக்களிக்க முடியாமல் போன அஞ்சல் வாக்காளர்கள் வாக்குப் பதிவு செய்வதற்கான மேலதிக நாட்களாக நேற்றும், நேற்று முன்தினமும் ஒதுக்கப்பட்டன.
வாக்காளர்கள் தமது மாவட்ட தேர்தல் அலுவலகத்திற்கோ அல்லது தமது பணியிடங்களுடன் தொடர்புடைய பிரதேச செயலகத்திற்கோ சென்று வாக்கினைப் பதிவு செய்யலாம் என ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
இன்றுடன் அஞ்சல் வாக்களிப்புகள் நிறைவடைகின்ற நிலையில், இனி ஜனாதிபதித் தேர்தல் நடைபெறும் செப்டெம்பர் 21ஆம் திகதி உட்பட எந்த தினத்திலும் அஞ்சல் மூலம் வாக்களிப்பதற்கான சந்தர்ப்பம் வழங்கப்பட மாட்டாது எனவும் தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.
இதனிடையே ஜனாதிபதித் தேர்தல் எதிர்வரும் 21ஆம் திகதி நடைபெறவுள்ளது. வாக்காளர்கள் தமது மாவட்ட தேர்தல் அலுவலகத்திற்கோ அல்லது தமது பணியிடங்களுடன் தொடர்புடைய பிரதேச செயலகத்திற்கோ சென்று வாக்கினைப் பதிவு செய்ய முடியும் என ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
இதேவேளை, எல்பிட்டிய பிரதேச சபை தேர்தலுக்கான வேட்பு மனுக்கள் இன்றையதினம் ஏற்றுக்கொள்ளப்படவுள்ளன.
குறித்த வேட்பு மனுக்கள் இன்று நண்பகல் 12 மணிவரை காலி மாவட்ட செயலகத்தில் ஏற்றுக்கொள்ளப்படும் எனத் தேர்தல்கள் ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.
அதேநேரம், எல்பிட்டிய பிரதேச தேர்தலுக்கான கட்டுப்பணம் செலுத்தல் இன்று நண்பகல் 12 மணியுடன் நிறைவடையவுள்ளது.
இதன்படி அங்கீகரிக்கப்பட்ட 10 அரசியல் கட்சிகளும், 2 சுயேட்சை குழுக்களும் கட்டுப்பணத்தைச் செலுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
000