13 ஆவது திருத்தச் சட்டத்தை முழுமையாகவும் திறம்படவும் அமுல்படுத்துவது நல்லிணக்கச் செயற்பாட்டை எளிதாக்கும் - ஜெனிவாவில் இந்தியா தெரிவிப்பு
இலங்கையில் 13 ஆவது திருத்தச் சட்டத்தை முழுமையாகவும் திறம்படவும் அமுல்படுத்துவது நல்லிணக்கச் செயற்பாட்டை எளிதாக்கும் என ஜெனிவாவில் உள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் இந்தியா தெரிவித்துள்ளது.
இலங்கையில் நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தல் தேசிய நல்லிணக்கத்தை மேலும் மேம்படுத்தும் என இந்தியா நம்புவதாக ஜெனிவாவில் உள்ள இந்திய நிரந்தர தூதரகத்தின் ஆலோசகர் கௌரவ் குமார் தாக்கூர் தெரிவித்தார்.
அண்மைக்காலமாக இலங்கை அரசாங்கம் நல்லிணக்கத்தை ஏற்படுத்த எடுத்த நடவடிக்கைகளை இந்தியா கவனத்தில் எடுத்துள்ளது.
எவ்வாறாயினும், தனது வாக்குறுதிகளை விரைவாகவும் அர்த்தமுள்ளதாகவும் செயல்படுத்துமாறு இலங்கை அரசாங்கத்தை இந்தியா தொடர்ந்து வலியுறுத்துகிறது.
இலங்கை விடயங்களை கையாளும் போது இந்தியா இரண்டு அடிப்படைக் கொள்கைகளை பின்பற்றுகிறது.
இலங்கைத் தமிழர்களின் அபிலாசைகள் பூர்த்தி செய்யப்பட்டு, அவர்கள் சமத்துவம், நீதி, கண்ணியம் மற்றும் சமாதானத்துடன் நடத்தப்படுதல் என்பது ஒன்று.
அடுத்ததாக இலங்கையின் ஐக்கியம், இறையாண்மை, பிராந்திய ஒருமைப்பாடு என்பவற்றுக்கும் இந்தியா முக்கியத்துவம் வழங்குகிறது என ஜெனிவாவில் உள்ள இந்திய நிரந்தர தூதரகத்தின் ஆலோசகர் கௌரவ் குமார் தாக்கூர் தெரிவித்தள்ளமை குறிப்பிடத்தக்கது.
000