இந்திய - சிங்கப்பூர் அமைச்சர்கள் மட்ட மாநாடு ஓகஸ்ட் 25
இந்திய - சிங்கப்பூர் உயர் மட்ட அமைச்சர்கள் பங்குபற்றும் வட்டமேசை மாநாடு எதிர்வரும் ஓகஸ்ட் 25 ஆம் திகதி நடைபெற உள்ளது. வெளிவிவகாரம், நிதி, வர்த்தகம் ஆகிய துறைகளுக்கான மூன்று அமைச்சர்கள் பங்குபற்றும் இம்மாநாட்டின் போது இணக்கம் காணப்படும் விடயங்களில் புரிந்துணர்வு உடன்படிக்கைகள் கைச்சார்த்திடப்படவிருக்கின்றன.
உணவுப் பாதுகாப்பு, டிஜிட்டல் மயமாக்கல் உள்ளிட்ட பல முக்கிய துறைகளில் ஒப்பந்தங்கள் கைச்சார்த்திடப்படலாமெனத் தெரிவித்துள்ள இந்திய - சிங்கப்பூர் அதிகாரிகள், இந்நிகழ்வில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொள்வதற்கான ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளனர்.
தாய்லாந்தில் பிம்ஸ்டெக் மாநாடு செப்டம்பர் 04 ஆம் திகதி நடைபெற உள்ளது. அம்மாநாட்டில் பங்குபற்ற செல்ல முன்னர் பிரதமர் மோடி சிங்கப்பூருக்கு பயணிப்பார் எனத் தெரிவிக்கப்படுகிறது.
இந்தியாவுக்கும் சிங்கப்பூருக்கும் இடையிலான தற்போதைய நட்புறவையும் ஒத்துழைப்பையும் புதிய மற்றும் வளர்ந்துவரும் துறைகளில் மேலும் மேம்படுத்துவதற்கு ஏற்ப இந்திய-சிங்கப்பூர் வட்ட மேசை மாநாடு 2022 இல் புதுடில்லியில் அமைக்கப்பட்டது. அம்மாநாட்டில் வெளிவிவகாரம், நிதி, வர்த்தகம் ஆகிய துறைகளின் அமைச்சர்கள் பங்குபற்றினர்.
அதன் போது டிஜிட்டல் இணைப்பு, பசுமைப் பொருளாதாரம், திறன் மேம்பாடு, உணவு உற்பத்தி உள்ளிட்ட பல துறைகள் குறித்து கலந்துரையாடப்பட்டுள்ளன. அதனடிப்படையில் எதிர்வரும் 25 ஆம் திகதி நடைபெறும் பேச்சுவார்த்தையின் போது இணக்கம் காணப்படும் விடயங்களில் புரிந்துணர்வு உடன்படிக்கைகள் கைச்சார்ப்படலாமென அவ்வதிகாரிகள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது
000