சர்வதேச சமூகத்துடன் செய்துகொள்ளப்பட்ட ஒப்பந்தங்களை மீற முடியாது - ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வலியுறுத்து
தனிநபர் வருமான வரிக்கு விரைவில் நிவாரணம் வழங்க எதிர்பார்ப்பதாகவும், அதற்காக சர்வதேச நாணய நிதியம் மற்றும் திறைசேரி ஆகியவற்றினால் ஏற்கனவே சமர்ப்பிக்கப்பட்டுள்ள இரண்டு முன்மொழிவுகள் தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டுள்ளதாகவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.
அதற்காக திறைசேரி சமர்ப்பித்த பரிந்துரையையும் சர்வதேச நாணய நிதியம் (IMF)முன்வைத்த மாற்றுப் பரிந்துரையையும் பரிசீலித்து வருவதாக தெரிவித்த ஜனாதிபதி, வரி எல்லையை விரிவுபடுத்துவதற்கும் சர்வதேச நாணய நிதியம் முன்வைத்திருக்கும் பரிந்துரைகள் அறிஞர்கள், நடுத்தர வர்க்க சமூகத்திற்கும் நன்மை பயப்பதாக அமையும் என்பதால் அது தொடர்பில் கவனம் செலுத்தியள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
அத்தோடு பொருளாதாரத்தை மீட்டெடுக்கும் நோக்கில் இலங்கையின் உயர்கல்வி முறையில் மாற்றம் ஏற்படுத்தும் வகையில் விரிவான சீர்திருத்தத் திட்டத்தை நடைமுறைப்படுத்த எதிர்பார்ப்பதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.
பத்தரமுல்லை வோட்டர்ஸ் எட்ஜ் ஹோட்டலில் நேற்றுமுன்தினம் (13) மாலை நடைபெற்ற 'இலங்கையின் உயர்கல்வியை அபிவிருத்தியடைந்த தேசத்திற்கு மாற்றியமைத்தல்' என்ற தொனிப்பொருளில் நடைபெற்ற பல்கலைக்கழக விரிவுரையாளர் மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மேற்கண்டவாறு தெரிவித்தார்.
நாட்டின் உயர்கல்வியின் தரத்தை உயர்த்தும் வகையில் அரச பல்கலைக்கழகங்களுக்கு சுதந்திரமாக செயற்படும் திறனை வழங்குவதன் முக்கியத்துவத்தையும் ஜனாதிபதி வலியுறுத்தினார்.