உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தின் அதிகாரிகள் எனக் கூறி சிலர், வர்த்தகர்களிடம் பணம் வசூலிப்பு - உள்நாட்டு இறைவரித் திணைக்களம் எச்சரிக்கை
உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தின் அதிகாரிகள் எனக் கூறி சிலர், வர்த்தகர்களிடம் சென்று பணம் வசூலிப்பதாக உள்நாட்டு இறைவரித் திணைக்களம் தெரிவித்துள்ளது.
பணம் சேகரிக்க வருவோரிடம் பணத்தை வழங்க வேண்டாம் எனவும் அந்த திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.
இவ்வாறானவர்களை சட்டத்தின் முன் நிறுத்தும் வகையில் அதனுடன் தொடர்புடையவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்குமாறு உள்நாட்டு இறைவரி திணைக்களம், இலங்கை பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளது.
இதேவேளை இவ்வாறு அறவிடப்படும் பணத்திற்கு தாம் பொறுப்பல்ல என உள்நாட்டு இறைவரி ஆணையாளர் நாயகம் விடுத்துள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உள்நாட்டு இறைவரி ஆணையாளர் நாயகத்தால் நிர்வகிக்கப்படும் அனைத்து வகையான வரிகள் தொடர்பான வரி வசூல் நிலுவைத் தொகைகள் சட்டரீதியாகவும் முறையாகவும் எழுத்து மூலம் அறிவிக்கப்படும் என அனைத்து வரி செலுத்துவோருக்கும் ஆணையாளர் நாயகம் அறிவித்துள்ளார்.
வரி செலுத்துவதில் ஏதேனும் பிரச்சனைகள் இருப்பின் அருகில் உள்ள பிராந்திய அலுவலகம் அல்லது உள்நாட்டு இறைவரி திணைக்களத்தின் பிரதான அலுவலகத்திற்கு வந்து அப்பிரச்சினைகளை தீர்த்துக்கொள்ளுமாறு உள்நாட்டு இறைவரி ஆணையாளர் நாயகம் தனது அறிவிப்பில் சுட்டிக்காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது
000